மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலி மாவட்டத்தில் உள்ள தவளம பிரதேச செயலகப் பிரிவுக்கு முதல் நிலை (மஞ்சள்) அறிவிப்பும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள மில்லனிய, புலத்சிங்கல, பேருவளை மற்றும் மதுவளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மஞ்சள் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மண்சரிவுகள் குறித்த இரண்டாம் நிலை முன்கூட்டிய எச்சரிக்கை
இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தில் உள்ள வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மண்சரிவுகள் குறித்த இரண்டாம் நிலை முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கேகாலை மாவட்டத்தில் உள்ள தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, அரநாயக்க, யட்டியந்தோட்ட மற்றும் மாவனெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு குறித்த முதல் நிலை முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ கோரள மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கையை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எலபத்தா மற்றும் பெல்மதுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 எச்சரிக்கையையும், குருவிட்ட, அயகம மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 2 மண்சரிவு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளால் வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.