80 அரசியல்வாதிகளுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தராதத்தில் உள்ள 80 அரசியல்வாதிகள் உட்பட 386 பேருக்கு எதிராக புதிதாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் உட்பட 42 பேருக்கு எதிராக விசாரணை
இதனை தவிர முறைகேடான முறையில் சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட 42 பேருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றமை சம்பந்தமான 22 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியால் இலஞ்சம் பெறுவது அதிகரிப்பு
ஊழல், மோசடிகள், இலஞ்சம் பெற்ற மற்றும் முறைகேடான முறையில் சொத்து சம்பாதித்தமை தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு இந்த வருடத்தில் பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் இஞ்சம் பெறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை காணமுடிவதாக ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன.