அநுராதபுரத்தில் பிக்குகளுக்கு இடையிலான மோதல்! வெளிச்சத்திற்கு வரும் பின்னணி
அநுராதபுரம் புனித பூமியில் நேற்றையதினம் பிக்குகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலின் பின்னால் அரசியல் இருப்பதாக புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
அநராதபுரம் புனித நகரத்தில் நேற்றையதினம், உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த கஸ்ஸப்ப தேரர் தரப்பினருக்கும், அங்கு வருகைத் தந்த ராஜாங்கணைய சத்தாரதன தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கும் கடும் மோதல் நிலை ஏற்பட்டது.
அரசியல் நோக்கம்
இதன்போது சத்தாரதன தேரர் கடுமையான தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு, குழப்பத்தை ஏற்படுத்திய கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் செனவி,
''அநுராதபுரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மோதலை எவரும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையில், அந்த மோதல் இடம்பெறாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அது எமது நவீன வரலாற்றில் ஒரு கறையாகவே அமைந்துள்ளது.

ஆனால், இவ்வாறான நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம் என்ன, அவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் தேவைகள் என்ன என்பது குறித்து அனைவரும் தெளிவாக அறிந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
எனவே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து குழப்பமடையாமல், நாம் அனைவரும் சரியான பாதையில் பயணிப்போம்.
அநுராதபுரம் எனும் இந்த மிகச் சிறப்புமிக்க நகரத்தில் உள்ள பௌத்த கலாசாரம் மற்றம்பௌத்த மதத்தின் அடித்தளங்களை முறையாகப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கும் அவற்றை வழங்குவதே எமது அனைவரினதும் நோக்கமாகும்'' என குறிப்பிட்டுள்ளார்.