திடீரென மாயமான பொலிஸ் அதிகாரி! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
டி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவரிடமிருந்த துப்பாக்கிகள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
குறித்த துப்பாக்கிகளை அவர் வேறு யாரிடமாவது ஒப்படைத்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர் மாயம்
மவுண்ட் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள், இரவு வீதித்தடை கடமைக்காக T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர், அவர் கடமை நிலையத்திற்கு எந்த வித தகவலையும் வழங்கவில்லை என்பதோடு அவரின் அலைபேசிக்கு அழைக்க முயன்றும் அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் சந்தேகநபர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் சந்தேகம்
அனுராதபுரம் – ஹலம்பகஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர் டுபாய்க்கு தப்பிச் செல்வதற்கு முன்னர் குறித்த துப்பாக்கியை பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், பொலிஸார் அவரின் உறவினர்களிடம் பெற்ற வாக்குமூலத்தில் அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |