தீவிர பாதுகாப்புடன் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி - பொலிஸார் குவிப்பு
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் தலையீடு
இந்தப் போட்டியில் பங்கேற்பதில்லை என பாகிஸ்தான் அரசு முன்னர் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும் இலங்கை அரசின் தலையீட்டினால் தீர்மானத்தை மாற்றிக்கொண்டு போட்டியில் விளையாடச் இணங்கியமைக்கு அநுர அரசாங்கம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கிரிக்கெட் விளையாட்டை ஒரு பாலமாகப் பயன்படுத்த முடியும். நாடுகளுக்கிடையிலான நட்புறவை வளர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போட்டியை நடத்தும் வாய்ப்பு
பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாத சூழல் காணப்பட்டது.

இதற்காக இலங்கை அரசாங்கம் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மட்டங்களில் தலையீடுகளை மேற்கொண்டது. அதன் இறுதி முடிவாக தற்போது இப்போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்ட விசேட கலந்துரையாடலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு உத்தியோகபூர்வமாகத் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளது.
போட்டி நடைபெறும் தினத்தில் ரசிகர்களின் வருகையினைக் கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்துத் திட்டமும் பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam