இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட டுபாயில் தலைமறைவான பொலிஸ் கான்ஸ்டபிள்
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணி, பொலிஸ் கடமைகளுக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை அவர்களிடம் ஒப்படைத்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கையிலிருந்து தப்பிச்சென்று டுபாயில் தலைமறைவான நிலையில், கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
வாக்குமூலங்கள் பதிவு
அநுராதபுரம், பேமடுவ ஹெலம்பகஸ்வெவ பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஜயக்கொடி ஆரச்சிகே கவிந்து ஆகாஷ் ஜயக்கொடி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (26) அதிகாலை 05.20 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.