போலி நிதி நிறுவனங்களினால் ஏமாற்றப்பட்ட 2500 பேர் - கோடீஸ்வர தொழிலதிபர் கைது
கண்டி மற்றும் கொஹுவல பகுதிகளில் இரண்டு போலி நிதி நிறுவனங்களை அமைத்து அதிக ஈவுத்தொகை வழங்குவதாக கூறி 2,500 இற்கும் மேற்பட்டோரை ஏமாற்றி பல பில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த கோடீஸ்வர தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக இதுவரை 200 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பெருந்தொகை நிதி மோசடி
மேலும், முறைப்பாடுகள் தொடர்பாக நடந்த நிதி மோசடியின் மதிப்பு ரூ. 40 கோடியைத் தாண்டியுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சந்தேகநபர், கண்டி மற்றும் கொஹுவல பகுதிகளில் இரண்டு போலி நிதி நிறுவனங்களை அமைத்து, ஒவ்வொரு மாதமும் அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் 2,500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் தொகையைத் தனது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
மாதாந்திர அடிப்படையில் அதிக வட்டி விகிதங்களைப் பெறும் நம்பிக்கையில், பல்வேறு நபர்கள் அவரது போலி நிதி நிறுவனங்களில் ரூ. 10 இலட்சம் முதல் ரூ. 20-3 கோடி வரையிலான பெரும் தொகையை வைப்பு செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் பல மாதங்களாக வைப்பாளர்களுக்கு வட்டி செலுத்தி வந்த நிலையில், பின்னர் அதை செலுத்த தவறியுள்ளார்.
இதனையடுத்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (26ஆம் திகதி) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை சுட்டிக்காட்டி உதய கம்மன்பில வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து