பொலிஸார் அச்சுறுத்தல்: நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர் தரணி ஆகியவர்களை பொலிஸார் நேற்று (23.11.2023), துப்பரவு பணியை செய்யவிடாது தடுத்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவுடன் மக்கள் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி மாவீர் துயிலும் இல்லத்தினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
யுத்தம் இல்லாத சூழலில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி எதற்கு..! நாடாளுமன்றில் கேள்வியெழுப்பிய கஜேந்திரகுமார்
ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
அதன்போது அங்கு சென்ற வவுணதீவு பொலிஸார் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது அசச்சுருத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக குறித்த குழுவினர் தொடர்ந்து துப்பரவு பணியை செய்யமுடியாது அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் பொது மக்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற வாழைச்சேனை பொலிஸார் அவர்களை அச்சுறுத்தியதுடன் தரணி என்ற இளைஞனை அச்சுறுத்தி அவரது கையடக்க தொலைபேசியை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த இரு பொலிஸ் நிலைய பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு எதிராக நீதி கோரி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |