6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை......
ஐ.நாவின் சான்றுகளின் அடிப்படையில் தண்டிக்கப்படுவது யார் என்றால், சில படை அதிகாரிகள் தான். இலங்கை அரசாங்கம் குற்றவாளியாக்கப்படவில்லை.இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாக்குவதற்கு ஐ.நா இன்றுவரை தயாரில்லை.
அது ஓர் அரசியல் தீர்மானந்தான்.அறுபதாவது ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் கடந்த 16 ஆண்டு கால தொகுக்கப்பட்ட அனுபவம் அதுதான்.
கடந்த எட்டாம் திகதி இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடக வெளியீடு பின்வருமாறு கூறுகின்றது.
60ஆவது அமர்வு
2025 செப்டம்பர் 08 அன்று இலங்கை குறித்த இடையூடாட்ட உரையாடலின் போது ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மாற்றத்தையும், அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்காக புதியதொரு அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் அரசியல் விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான உள்நாட்டு செயன்முறைகள்மூலம் குறுகிய காலத்திற்குள் ஏற்பட்ட முன்னேற்றத்தை அமைச்சர் எடுத்துரைத்த அதேவேளையில்,இலங்கைக்கு இந்நோக்கத்தை அடைய உரிய நேரத்தையும்,அதற்கான அவகாசத்தையும் அனுமதிக்குமாறு சபையிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த இடையூடாட்ட உரையாடலில், பஹ்ரைன், குவைத், ஓமன், கட்டார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் சார்பாக குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், எத்தியோப்பியா, ஐவரிகோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஜப்பான்,லாவோஸ்.தாய்லாந்து,வனுவாட்டு, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா,அஜர்பைஜான், இந்தோனேசியா,துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுலா, மாலத்தீவு, கியூபா, தெற்கு சூடான், சூடான், ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் ப்ருண்டி ஆகியவை உள்ளடங்கலாக 43 நாடுகள் பங்கேற்றன.
மேற்குறிப்பிட்ட நாடுகள் இலங்கையோடு தமது உணர்வுத் தோழமையை வெளிப்படுத்தியதுடன்…..” மேற்கண்டவாறு ஐநாவில் இங்கையுடன் உணர்வுத் தோழமையை வெளிப்படுத்திய நாடுகளில் ஒன்று, ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள எரித்திரியா, ஆயுதப் போராட்டத்தின் மூலம் எதியோப்பியாவில் இருந்து விடுதலை பெற்ற ஒரு நாடு.1980களில் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆயுதம் ஏந்திப் போராடிய இயக்கங்களுக்கு ஒரு விருப்பத்துக்குரிய முன்னுதாரணமாகக் காணப்பட்டது.
எரித்திரியா விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய கட்டுரைகளும் படங்களும் தமிழ் விடுதலை இயக்கங்களின் உத்தியோகபூர்வ இதழ்களில் பிரசுரிக்கப்படுவதுண்டு.அது பழைய கதை. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அறுபதாவது ஐநா கூட்டத்தொடரில் எரித்திரியா யாரோடு நிற்கின்றது ? எரித்திரியா மட்டுமல்ல அந்த நாடு யாருக்கு எதிராகப் போராடியதோ யாரிடமிருந்து விடுதலை பெற்று பிரிந்து சென்றதோ அந்த எதியோப்பியாவும் உட்பட ஒரு தொகுதி நாடுகள் நடப்பு ஐநா கூட்டத் தொடரில் இலங்கைத் தீவுக்கு ஆதரவாக நிற்கின்றன.
காசா மீது தாக்குதல்
இந்த விடயத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய,போராடி விடுதலை பெற்ற கியூபா,வியட்நாம் தென் சூடான் போன்ற நாடுகள் ,போராடிக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தைத்தான் ஆதரிக்க வேண்டும். அதுதான் அறம். ஆனால் அந்த அறம் எல்லாம் ஐநாவில் கிடையாது. ஏன் அதிகம் போவான்? பாலஸ்தீனம் இப்பொழுதும் இன அழிப்புக்கு உள்ளாகிறது.
16 ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் நடந்ததுதான் இப்பொழுது காசாவில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களில் அதிகமானவர்கள் காசாவின் பக்கம்தான். இஸ்ரேலின் பக்கம் அல்ல.ஆனால் ஒரு அதிகார சபையாக பலஸ்தீனர்கள் யாரோடு நிற்கிறார்கள்? மகிந்தோடு நிற்கிறார்கள்.
2009க்கு பின்னர்தான் பாலஸ்தீன அதிகார சபை மகிந்தவை அங்கு விருந்தினராகக் கூப்பிட்டு அந்த நாட்டின் அதி உயர் விருதை வழங்கியது. அதுமட்டுமல்ல அவருடைய பெயரில் ஒரு வீதியையும் திறந்து வைத்தது.
எனவே அரசுகள் அல்லது அரைகுறை அரசுகள் முடிவெடுக்கும் பொழுது அறத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதில்லை. நலன்களின் அடிப்படையில்தான் முடிவெடுக்கின்றன. நடந்து கொண்டிருக்கும் அறுபதாவது ஐநா கூட்டத்தொடரும் அதைத்தான் நிரூபிக்கின்றது.
ஐ.நாவின் 60ஆவது கூட்டத் தொடரின் தொடக்க நாளில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வாசித்து அறிக்கையானது தமிழ் மக்களுக்கு பெரிய உற்சாகத்தைத்தரவில்லை. அவர் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை, நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகள் நிறைந்த வாசகங்களைக் கொண்ட ஒரு அறிக்கையை வாசிப்பார் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்து இருந்திருந்தால் அது தமிழ் மக்களின் தவறுதான்.
ஏனென்றால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒரு ராஜதந்திரி. அவரை ஒரு மனித உரிமைக் காவலர் என்று நம்பினால் அது தமிழ் மக்களுடைய தவறு. அவர் ஒரு மனித உரிமைக் காவலராக இருந்திருந்தால் காசாவில் நடப்பவற்றை ஏன் தடுக்க முடியாதிருக்கிறார்? காசாவில் நடப்பவற்றைத் தடுக்கும் சக்தியற்ற, கையாலாகாத ஒரு உலகப் பொது நிறுவனமாகத்தான் ஐ.நா காணப்படுகிறது.
ஐ.நா
எப்படி 2009இல் முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது ஐ.நா காணப்பட்டதோ,எப்படி 1996ஆம் ஆண்டு கிழக்கு ஐரோப்பாவில் செப்ரெனிகாவில் ஐநா இன அழிப்பின் கையாலாகாத சாட்சியாக பேசாமல் நின்றதோ, அப்படித்தான் இப்பொழுது காசாவிலும் நிற்கின்றது. எனவே மனித உரிமைகள் ஆணையாளரை மனித உரிமைகளைக் காப்பாற்றும் ஒரு தேவதையாகப் பார்ப்பதே தவறு.
அவர் முதலாவதும் கடைசியுமாக ஒரு ராஜதந்திரி. மேலும் ஐ.நாவில் மனித உரிமைகள் எனப்படுகின்றவை மேற்கு நாடுகளால் கையாள முடியாத அரசுகளை நெருக்குவதற்கான உபகரணங்கள்தான்.
எனவே ஐநா ஐநாவின் மனித உரிமைகள் ஆணையகத்தை அதற்குள்ள வரையறுக்கப்பட்ட ஆணைக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா தொடர்ச்சியாக ஒரே அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது.
அது என்னவென்றால் நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் பொழுது அந்த ஆட்சி மாற்றங்களுக்கூடாக பொறுப்புக்கூறலை எப்படிக் கொஞ்சமாவது நிறைவேற்றலாமா என்று முயற்சிப்பது. இது உண்மையில் ஐ.நாவிடம் உள்ள நப்பாசை அல்ல.மாறாக ஈழத்தமிழ் அரசியலை எங்கு பெட்டிகட்டி வைக்க வேண்டும் என்ற ஓர் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையிலான ஓர் அணுகுமுறைதான். ராஜதந்திர அணுகுமுறைதான்.
இலங்கையில் மேற்கு நாடுகளுக்குச் சாதகமான அல்லது மேற்கு நாடுகளால் கையாளப்படத்தக்க ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்பொழுது புதிய அரசாங்கங்களுக்கு ஊடாக பொறுப்பு கூறலை எப்படி முன்னெடுக்கலாம் என்று தான் ஐ.நா சிந்திக்கின்றது. அதிலும் குறிப்பாக முக்கியமாக பொறுப்புக்கூறத் தயாரில்லாத இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க அல்லது தண்டிக்க ஐ.நா தயாரில்லை.
அவ்வாறு தயாரில்லை என்ற அரசியல் தீர்மானம் காரணமாகத்தான் குறிப்பிட்ட அரசாங்கங்களின் மீது அழுத்தங்களை அல்லது தடைகளை பிரயோகிக்கக்கூடிய ஆணையைக் கொண்டிராத மனித உரிமைகள் பேரவைக்குள் இலங்கை இனப்பிரச்சினை பெட்டி கட்டப்பட்டிருக்கிறது. அது ஒரு அரசியல் தீர்மானம். உலகளாவிய ஓர் அரசியல் தீர்மானம். இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை இனப் பிரச்சனையானது மனித உரிமைகள் பேரவைக்குள் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கம்
2021ஆம் ஆண்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம்தான் இந்த 16 ஆண்டுகளிலும் கிடைத்த குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அடைவு. ஆனால் அதிலும் கேள்விகள் உண்டு. அங்கே சேகரிக்கப்படுகிற சான்றுகளும் சாட்சிகளும் பொருத்தமான சட்ட ஏற்பாடுகள் ஊடாகப் பொருத்தமான அனைத்துலக நீதிமன்றங்களை நோக்கி நகர்த்தப்படுமா என்ற கேள்வியை கஜேந்திரகுமார் கேட்டிருக்கிறார்.
அதில் தன்னுடைய சொந்த சாட்சியத்தை ஐநா கையாண்ட விதம் தொடர்பாகவும் அவர் சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.ஐ.நாவிற்குக் கூட்டுக் கடிதம் எழுதுவதற்காக டில்கோ ஹோட்டலில் கூடிய கூட்டத்தில் அவர் அதைத் தெரிவித்தார். ஆனால் ஐ.நாவை ஆதரிப்பவர்களும் நிலைமாறு கால நீதியின் ஆதரவாளர்களும் கூறுகிறார்கள்.
அந்தச் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அலுவலகத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில்தான் அமெரிக்கா,கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் குறிப்பிட்ட சில படை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக. ஆனால் இந்த நடவடிக்கைகள் இலங்கை அரசு கட்டமைப்புக்கு எதிரானவை அல்ல.
அதாவது யுத்தத்தை நடத்திய, இன அழிப்பை ஓர் அரசுக் கொள்கையாகக் கொண்ட அரசுக் கட்டமைப்புக்கு எதிரானவை அல்ல.மாறாக அந்த அரசக் கட்டமைப்பின் ஆணையை ஏற்றுப் போரை முன்னெடுத்த சில தளபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதிரானவைதான்.
எனவே ஐ.நாவின் சான்றுகளின் அடிப்படையில் தண்டிக்கப்படுவது யார் என்றால், சில படை அதிகாரிகள்தான். இலங்கை அரசாங்கம் குற்றவாளியாக்கப்படவில்லை.இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாக்குவதற்கு ஐ.நா இன்றுவரை தயாரில்லை.அது ஓர் அரசியல் தீர்மானந்தான்.அறுபதாவது ஐ.நா கூட்டத் தொடரின் பின்னணியில் கடந்த 16 ஆண்டு கால தொகுக்கப்பட்ட அனுபவம் அது தான்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 17 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
