தமிழர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய திலீபன் சிலை அகற்றம் - பொலிஸார் விளக்கம்
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், நாட்டில் மீண்டும் யுத்த மனநிலையை உருவாக்கக் கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எம்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அந்த உருவச்சிலை அகற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் “எல்லான் படை” என்ற குழுவொன்று செயற்படுகின்றது என்று எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

அந்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதும், மீண்டும் ஒரு மோதல் சூழ்நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளை முற்றிலுமாகத் தடுப்பதும் பொலிஸாரின் பிரதான பொறுப்பாகும்.
அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் விளைவுகள் சில நாட்களில்..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் வசூலைக் குவிக்குமா போராட்டம் திரைப்படம்..! கிளிநொச்சி சிறப்புத் திரையிடலில் கிடைத்த வரவேற்பு