சட்டத்தரணியின் சாரதியிடம் மன்னிப்புக் கோரிய பொலிஸார்: யுக்திய நடவடிக்கையில் அத்துமீறல்
யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு சோதனையொன்றின் போது அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் சட்டத்தரணியொருவரின் சாரதியிடம் பொலிஸார் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, உச்சநீதிமன்றத்தில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, “சட்டத்தரணியொருவரிடம் சாரதியாக பணியாற்றும் களுத்துறையைச் சேர்ந்த செல்வராஜ் ராஜபாண்டி என்பவர் கடந்த ஜனவரி 16ஆம் திகதி நீர்கொழும்பு பகுதிக்கு சென்றுள்ளார்
அவர் திரும்பி வரும் வழியில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸார் , ராஜபாண்டி செலுத்தி வந்த காரை வழிமறித்து அவரை இறக்கி கைகளில் விலங்கு மாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சை குத்திய அடையாளம்
அதன் பின்னர் அவரது கையொன்றில் பச்சை குத்திய அடையாளம் உள்ளதா என்று பரீட்சித்துப் பார்த்த பின்னர், அவ்வாறான அடையாளம் இல்லாத நிலையில் தாம் தவறான நபரொருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்து, அவரை விடுதலை செய்துள்ளனர்.
இந்தச்சம்பவம் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து, ராஜபாண்டி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி, மகிந்த சமயவர்த்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சம்பவத்துடன் தொடர்புடைய நீர்கொழும்பு பொலிஸார் ஐவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, தமது தரப்பில் நடைபெற்ற தவறுக்கு முறைப்பாட்டாளரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |