மத்திய கிழக்கில் உடனடி போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் – சீனா கோரிக்கை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்ற நிலையை முன்னிட்டு, அந்தப் பிராந்தியத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வேங் யீ, பஹ்ரைன் மற்றும் குவைத் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த உரையாடல்களின் போது மத்திய கிழக்கில் வேகமாக மோசமடைந்து வரும் சூழ்நிலை குறித்து சீனா ஆழ்ந்த கவலை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லத்தீப் பின் ராசீட் அல் ஸயானியுடன் நடைபெற்ற உரையாடலில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவதற்காக சீனா ஆக்கபூர்வமான பங்காற்றத் தயாராக இருப்பதாகவும் வேங் யீ தெரிவித்துள்ளார்.
மேலும் குவைத் வெளியுறவு அமைச்சர் ஜாரா ஜாபர் அல் அஹமட் அல் சாபாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் வளைகுடா நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பௌதீக ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.