இலங்கையில் தடையின்றி கிடைக்கும் லிட்ரோ எரிவாயு!
இலங்கையில் உள்ள 4 மில்லியனுக்கும் அதிகமான வீட்டு உபயோக நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயுவை வழங்க மாதந்தோறும் இறக்குமதி நடவடிக்கைகள் தொடர்வதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் (Litro Gas Lanka Limited) அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிசக்தி தேவைகளைக் கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு எவ்வித இடையூறுமின்றி சிலிண்டர்களை விநியோகிப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம்
40 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு தட்டுப்பாடின்றி எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய மாதாந்தம் புதிய கையிருப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற 'ஜியோகாஸ்' (Geogas) நிறுவனத்திடமிருந்து லிட்ரோ நிறுவனம் திரவ பெட்ரோலிய எரிவாயுவைப் (LPG) பெற்றுக்கொள்கிறது.
அமெரிக்காவின் பால்ஸ்போரோ (Paulsboro) பகுதியிலிருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு எரிவாயு கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் திட்டமிட்ட அட்டவணையின்படி கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைகின்றன.
இதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் நம்பகமான விநியோகத்தை பராமரிக்க முடிவதாக நிறுவனம் கூறியுள்ளது.
சர்வதேச அளவில் எரிசக்தி சந்தையில் மாற்றங்கள் நிலவினாலும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான கையிருப்பு தங்களிடம் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.