வெளிநாட்டிலிருந்து வந்த பயணி! கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த பொதியில் மர்மம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் போதைப்பொருளுடன் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விவசாய பொறியியலாளரான 79 வயதுடைய ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி
கடந்த 22 ஆம் திகதி சியரா லியோனில் இருந்து அடிஸ் அபாபா மற்றும் தோஹா ஊடாக கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR654 விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த பயணப்பையை சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும், சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், அவரது மற்றைய பயணப்பை குறித்த விமானத்தில் வராத காரணத்தினால், உரிய வருகை நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தாமதமாக வந்த பயணப் பை பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன், அதைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு வந்துள்ளார்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணப்பை
குறிப்பிட்ட பயணப் பையை விடுவிப்பதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் அது எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவதானிக்கப்பட்டதையடுத்து, அது முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பயணப் பையினுள் மிகவும் நுட்பமான முறையில் முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொகைன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் மொத்த எடை 2.198 கிலோகிராம் எனவும் இதன்பெறுமதி 109.9 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஆரம்ப விசாரணைகளை இலங்கைச் சுங்கம் தொடங்கியுள்ளது.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட கொகைன் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.