பாரிய ஊழல் மோசடியில் சிக்கப் போகும் பிரபல பெண் அரசியல்வாதி
கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளன.
குறித்த விசாரணைகளுகளுக்கமைய, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேருக்கு மேற்பட்டோரிடம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
மோசடிகள், முறைகேடுகள்
விசாரணைகளில் சிக்கியவர்களில் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க முக்கியமானவராக உள்ளவராக தெரியவந்துள்ளது.

அத்துடன், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.
கொழும்பு மாநகரசபைக்குள் இடம்பெற்ற பல மோசடிச் செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 3,500 வீதம் பணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், அங்கு உண்மையான குறைந்த வருமானம் பெறுவோருக்குப் பதிலாக முன்னாள் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட பட்டியலுக்கே வழங்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி
முன்னாள் உறுப்பினர்களின் அரசியல் ஆதரவாளர்களின் பட்டியல்களுக்குரிய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கான சாட்சிகள் வெளிவந்துள்ளன. உறுப்பினர்கள் பலரும் தமது உத்தியோகபூர்வ அலுவலகங்களை நடத்திச் செல்வதாகக் கூறியும் ஏமாற்றியுள்ளனர்.

கொழும்பு பிரதான நகரங்களை அண்மித்த வர்த்தக மதிப்புமிக்க இடங்களில் வாகனத் தரிப்பிடத்திற்காகக் காணிகளை ஒதுக்கியுள்ளனர்.
பின்னர் அந்த இடங்களை பெருமளவு பணத்திற்குத் தனியார் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்து நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் மற்றும் முறைகேடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படும் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்க சாட்சி விசாரணை ஒன்றை நடத்துவதற்கும் ஆணைக்குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.