அநுர அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி
அநுர அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்றும், அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு, எதுல்கோட்டேயில் இன்று(7) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடுமையான விமர்சனம்
தற்போதைய அரசின் நிர்வாக நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அரசமைப்பு விவகாரங்கள் தொடர்பில் அவர் கடுமையான விமர்சனங்களை இதன்போது முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்கள், கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவோ அல்லது மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்களை அறிவிக்கவோ நடத்தப்படவில்லை.

மாறாக, பழைய பொய்களை மீண்டும் சமூகத்தில் பரப்பி, அரசின் மீதான மக்களின் விரக்தியை மறைத்து, மக்களை மீண்டும் ஏமாற்றும் நோக்கிலேயே இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் பேருவளைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த விமர்சனத்துக்குரியவை. ஜனாதிபதியின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பேருவளை மீன்பிடித் துறைமுகத்துக்குள் படகுகள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதால், அந்தப் பகுதி மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அரசு கூறிவரும் நிலையில், ஜனாதிபதியின் கூட்டங்களுக்குப் பெருமளவு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களில் 37 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் 17 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை நாட்டின் உண்மையான பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகின்றது.
அநுரகுமார திஸாநாயக்க
முன்னாள் ஜனாதிபதிகளின் கூட்டங்களை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அரச வாகனங்கள், பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தித் தனது கட்சியின் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.
இது அரச நிதி மற்றும் அரச வளங்களை நேரடியாகத் துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும். சுகாதாரத்துறை தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று மீறப்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கு முன்னர் சுகாதாரத் துறைக்கான 'வட்' வரியை நீக்குவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி, தற்போது மக்கள் தமக்குத் தேவையான நேரத்தில் வைத்தியசாலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவரின் பரிந்துரையுடனேயே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றார்.
இவ்வாறான நடவடிக்கைகள் இலவச சுகாதார சேவையைப் படிப்படியாக இல்லாதொழிக்கும் முயற்சியாகும். அதேவேளை, 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைப்பதற்கு முன்னரே ஜனாதிபதி அது தொடர்பில் கருத்து வெளியிட்டமை தவறான முன்னுதாரணமாகும்.
நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே கணித்துச் செயற்பட முடியாது. அரசமைப்பு ரீதியான குழப்பங்களைத் தவிர்க்க இந்த விவகாரம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு நடத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது.
மக்களின் வாழ்வாதாரம்
அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் காரணமாக சுமார் 10 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் இரகசியமாக வெளியேற்றப்பட்டமை மற்றும் திறைசேரிக்கு 2.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டமை உள்ளிட்ட தவறான நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் கறுப்புப் பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளது.

இதன் விளைவாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி அரசியலை அழிப்பதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பு அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஜனநாயகத்துக்கு நேரடியான அச்சுறுத்தலாகும். மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் எந்தவொரு அரசையும் மக்கள் இறுதியில் விரட்டியடிப்பார்கள். எதிர்க்கட்சியை அச்சுறுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.