10 மில்லியன் மதிப்புள்ள பறவைகள் கடத்தல்: 4 பேர் கைது - படகும் வானும் பறிமுதல்
கல்பிட்டிய கோட்டைக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பொலிஸ் சோதனையின் போது, கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 புறாக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் நேரடி வழிகாட்டலின் கீழ், சிறப்பு பொலிஸ் படையொன்றினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கை
அத்துடன் பணப் பந்தயம் வைக்கும் புறாப் பந்தயங்களில் பயன்படுத்துவதற்காகவே இந்தப் புறாக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் புறாக்களுடன் சேர்த்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு படகு, அதன் இயந்திரம் மற்றும் ஒரு வேன் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கைப்பற்றப்பட்ட ஒரு புறாவின் மதிப்பு சுமார் ரூ. 50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து புறாக்களின் மொத்த மதிப்பு ஏறத்தாழ ரூ. 10 மில்லியன் (1 கோடி) ஆகும்.
இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஏனைய மூவரும் கல்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.