நாமல் கைதால் Gen Z தலைமுறை ஆத்திரமடைந்தார்களா..! ரணிலின் கருத்தை நிராகரித்த முக்கியஸ்தர்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதால் 'Gen Z' தலைமுறையினர் ஆத்திரமடைந்துள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களிடம் பேச இதுவே காரணம்
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் 'Gen Z' தலைமுறையினர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டுவர பிற்போக்கு சக்திகள் சதி செய்தால் மட்டுமே 'Gen Z' தலைமுறையினர் அதற்கு எதிராகக் கொதித்தெழுவார்கள் என தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு இளைஞர் தலைமுறையினரிடம் எதிர்ப்பில்லை என்றும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கே அது தொடர்பில் எதிர்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச மீதான விளக்கமறியல் உத்தரவு
தற்போதைய அரசாங்கத்திடம் நன்மையும் தீமையும் ஆகிய இரு பக்கங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒருவித குழப்ப நிலையை உணர்ந்ததாலேயே தேசிய மக்கள் சக்தி மக்கள் பேரணிகளை நடத்தத் தீர்மானித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை மட்டுமே பிரதான காரணியாக வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும், நாமல் சிறையிலிருப்பது அந்த பேரணியைச் வெற்றிபெறச் செய்ய அவர்களுக்கு ஒருவகையில் உதவியாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தற்போது அடிமட்ட அழுத்தத்தை உணர்ந்துள்ளதாலேயே மீண்டும் மக்களிடம் சென்று உரையாடலைத் தொடங்கத் தீர்மானித்துள்ளது என்றார்.