40 வருடங்களாகி விட்ட நாடாளுமன்ற கட்டிடம்: மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை
40 வருடங்கள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தேவையான புனரமைப்பு பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவர், இந்த தகவலை நேற்றைய தினம் (05.05.2024) ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
"அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவின் அமர்வின் போது நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்குத் தேவையான அவசரமான புனரமைப்பு பணிகள் அடையாளம் காணப்பட்டன.
நிதி ஒதுக்கீடு
இதற்கமைய, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் ஆகியவற்றின் ஆதரவுடன் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சபாநாயகர், சபைத் தலைவர், கல்வியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் குழு தேவையான நிதியை வழங்குவதற்கான கொள்கை உடன்பாட்டை எட்டியது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
முன்னதாக, 1979ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை தியவன்னா ஓயாவில் ஐந்து ஹெக்டேர் நிலப்பரப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அப்போதைய நாடாமன்றத்தில் அனுமதி பெற்றார்.
அதனை தொடர்ந்து, கட்டிடத்தின் வடிவமைப்பு, கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதுடன் ஜப்பானிய கூட்டமைப்பின் 25.4 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், திட்டமிடப்பட்ட 26 மாத காலத்திற்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டு 1982ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் (J.R. Jayawardena) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |