மத்திய கிழக்கு பகுதியில் புதிய இராணுவ பதற்றம்! வளைகுடாவை நோக்கி வரும் அமெரிக்க விமானம்
ஈரானில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஒரு விமானத் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு (Aircraft Carrier Strike Group) வளைகுடா பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது மத்திய கிழக்கு பகுதியில் புதிய இராணுவ பதற்றம் உருவாகுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் உள்ளக இலக்கு
“ஈரானை நாங்கள் கவனித்து வருகிறோம். பெரிய படையணியையே அந்த திசையில் அனுப்புகிறோம். இதனை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமலும் போகலாம்,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தென் சீனக் கடலில் இருந்த USS Abraham Lincoln விமானத் தாங்கிக் கப்பல், திடீரென தனது பாதையை மாற்றி மத்திய கிழக்கை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்த தாக்குதல் குழுவில், Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட Arleigh Burke வகை நாசகார கப்பல்கள் இடம்பெற்றுள்ளன.
இவை ஈரானின் உள்ளக இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டவை. மேலும், இந்த கப்பல்களில் உள்ள Aegis combat system மூலம் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்க முடியும் என அமெரிக்க பாதுகாப்புத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேல்–ஈரான் இடையே 12 நாட்கள் நீண்ட போரின் போது, அமெரிக்கா ஈரானின் மூன்று அணு தளங்களை தாக்கியது. அப்போது, நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து சுமார் 30 Tomahawk ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், B-2 பாம்பர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அரசுக்கு எதிரான போராட்டம்
ஈரானில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களை இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் ஆதரித்திருந்தார்.
“உதவி வருகிறதே” என அவர் கூறியிருந்தாலும், பின்னர் இராணுவ மொழியை தளர்த்தினார். தற்போது அந்த போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமெனி பதவி விலக வேண்டும் என விரும்புகிறாரா என்ற கேள்விக்கு, “அதைப் பற்றி பேச விரும்பவில்லை. அவர்கள் எங்களைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்,” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறு இருப்பதால், மத்திய கிழக்கு பகுதியில் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, சமீபத்திய போராட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.இதில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.