ரஷ்ய எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய பிரான்ஸ்! வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள்
சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் எண்ணெய் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடற்படையினால் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்தக் கப்பலின் இந்திய மாலுமி தற்போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'தி கிரின்ச்' (The Grinch) என்று பெயரிடப்பட்ட இந்த எண்ணெய் கப்பல், ரஷ்யாவின் ஆர்க்டிக் துறைமுகமான முர்மான்ஸ்க்கில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது பிரான்ஸ் கடற்படையால் இடைமறிக்கப்பட்டது.
கப்பல்கள் மூலம் வருவாய்
இந்தக் கப்பல் கொமோரோஸ் தீவுகளின் கொடியுடன் பயணித்தாலும், உண்மையில் ரஷ்யாவிற்குச் சொந்தமானது என்றும், சர்வதேசத் தடைகளில் இருந்து தப்பிக்கப் போலி அடையாளத்தைப் பயன்படுத்துவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய 'நிழல் உலக' கப்பல்கள் மூலம் கிடைக்கும் வருவாய், யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட உதவுவதாக மெக்ரோன் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பலின் மாலுமி 58 வயதுடைய இந்தியர் ஆவார்.
அவர் தற்போது மார்சேய் (Marseille) நகரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கப்பலில் இருந்த மற்ற மாலுமிகள் அனைவரும் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் தற்போது கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத் தடை
இந்தக் கப்பல் பயன்படுத்திய கொடியின் உண்மைத்தன்மை மற்றும் சர்வதேசத் தடைகளை மீறியமை குறித்து மார்சேய் சட்டத்தரணிகள் அலுவலகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது இந்தக் கப்பல் மார்சேய் அருகே உள்ள பிரான்ஸ் துறைமுகத்தில் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கப்பலைச் சுற்றி வான்வழி மற்றும் கடல்வழித் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் சர்வதேசத் தடைகளைத் தவிர்க்க இது போன்ற 'நிழல் உலகக் கப்பல்களை' (Shadow Fleets) அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.
எஸ்&பி குளோபல் (S&P Global) நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, உலகில் உள்ள ஐந்து எண்ணெய் கப்பல்களில் ஒன்று இத்தகைய சட்டவிரோதக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.