டித்வா புயல் அனர்த்தம்: அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை
இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 3 பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
மாவட்ட அரச அதிபர்களினால் உறுதி செய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய, கண்டி, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் 173 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 199 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 680 பேர் தொடர்ந்தும் 85 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 48 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 884 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.