பாடசாலைக்கு அதிபர் வேண்டும் ஆசிரியர்கள் வேண்டுமென பெற்றோர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில்!
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை ஆசிரியர் இல்லாத நிலை தொடர்ந்து வருவதாக தெரிவித்து பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றையதினம்(31.3.2026) முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் பாடசாலையின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மந்தகதியில் இடம் பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
அத்தோடு, இதுவரை அதிபர் இந்த பாடசாலைக்கு நியமிக்கப்படவில்லை. 153 மாணவர்கள் கல்வி கற்று வரும் குறித்த ஆரம்ப பாடசாலையில் கட்டிட வசதிகள் என பெரும்பலவான வசதி வாய்ப்புகள் இருந்த போதும் அதிபர் ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுகின்றது.
வலயக்கல்வி அலுவலகத்திற்கு இது தொடர்பில் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் சென்று முறையிட்ட போதும் இந்த பாடசாலைக்கான அதிபர்களுக்கு இரண்டு தடவை விண்ணப்பித்திருந்தும் எவரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் தாங்கள் என்ன செய்வது என்று தெரியாது கைவிரித்துள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பாடசாலையின் இந்த நிலைமை குறித்து வடமாகாண கல்வி பணிப்பாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாகாண திணைகள் அதிகாரிகள் பாடசாலையின் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த பாடசாலைக்கு அதிபரையும், ஆசிரியரையும் நியமிக்குமாறு பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஊடாக தெரிவித்துள்ளார்கள்.