பாடசாலை முன்பு கோழிக் கழிவுகள்: ஊதுபத்தி ஏந்தி படிக்கும் மாணவர்கள்!
கந்தளாய் பேராறு அல்-தாரிக் கனிஷ்ட வித்தியாலயம் முன்பாக சட்டவிரோதமாக கோழிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சுகாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தக் கழிவுகள் கொட்டப்படும் இடம் மற்றும் பாடசாலை இடையிலான தூரம் வெறும் 15 மீற்றர் மட்டுமே என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வீசும் கடும் துர்நாற்றம் காரணமாக, மாணவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு வகுப்பறைகளில் பாடம் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நோய்த்தொற்று அபாயம்
துர்நாற்றத்தை தாங்க முடியாமல், மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் ஊதுபத்திகளை ஏற்றி வைத்து கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் தெரிவிக்கையில், “இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது. சமூகப் பொறுப்பின்றி சிலர் பாடசாலை முன்பாக கோழிக் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது” என தெரிவித்தனர்.
மழைக்காலங்களில் இந்தக் கழிவுகள் தேங்கி நின்று நோய்த்தொற்று அபாயம் அதிகரிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
கோரிக்கை
மேலும், பெற்றோர் ஒருவர் தெரிவிக்கையில், பாடசாலை முன்பாகக் கழிவுகள் கொட்டப்படுவதை உடனடியாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியை சுத்தம் செய்து மாணவர்களுக்கு சுகாதாரமான கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாகக் கழிவுகள் கொட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் கந்தளாய் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரும் பெற்றோர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.