தமிழின அழிப்புக்கான சாட்சிகளே செம்மணி எலும்புக்கூடுகள்..! அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு குடும்பங்கள் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அழிப்பே இனவழிப்பு என்பதனை உறுதிப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணிப் புதைகுழி
நேற்றையதினம்(15) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
தமிழர்கள் இலங்கையில் 1956ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட பேரினவாதத்தால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். இதனைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த உறவுகள், தமிழ்ப் புத்திஜீவிகள் ஆகியோர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உரக்கச் சொல்லி வருகின்றனர்.
அதற்கான சாட்சியங்களாக, செம்மணிப் புதைகுழியில் இருந்து கண்கூடான சாட்சியங்களாக எலும்புக்கூடுகள் அகழ அகழ வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை 539 எலும்புக்கூடுகள் தமிழின அழிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவறைக் கருவில் இருந்து குழந்தை, சிறுவர், குமரர், தாய், தந்தையர், வயோதிபர், அங்கவீனர் என எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவரும் செம்மணியில் அரச பயங்கரவாதக் கருவியான இராணுவத்தின் மூலம் அழிக்கப்பட்டுள்ளனர். அதனை எலும்புக்கூடுகள் பேசாமல் பேசுகின்றன.
பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் கூட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இனவழிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. இலங்கையில் 1956ஆம் ஆண்டு தமிழின அழிப்பு, இக்கினியாகலையில் பேரினவாதக் குண்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் 157 அப்பாவித் தமிழர்கள் பேரினவாதக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
அப்பாவித் தமிழர்கள்
அதற்கான நீதி வழங்கப்படாததால், அடுத்து 1958ஆம் ஆண்டு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழின அழிப்புகள் சர்வசாதாரண நிகழ்வுகளாக இடம்பெற்றன. அவற்றை பேரினவாத அரசு கண்டுகொள்ளவில்லை.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை தமிழினப் படுகொலைக்கான ‘கறுப்பு ஜூலை’ என தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். அதில் 3,000 முதல் 5,000 வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு முதல் தமிழின அழிப்பு என்பது தொடர்ச்சியான நிகழ்வாகி, 2009 மே 18ஆம் திகதி வரை தீவிரமாக நடைபெற்றது. அதன் பின்னரும் கலாசார, வரலாற்று மற்றும் உணர்வு ரீதியான அழிப்புகள் தொடர்கின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய தமிழ் மக்களுக்கு முதற்கட்ட பதிலாக செம்மணி சிந்துபாத்தி புதைகுழி கண்களைத் திறக்க வைத்துள்ளது.
இதேபோல் பல புதைகுழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், படுகொலை செய்யப்பட்ட உறவுகளும் எலும்புக்கூடுகளாக எமது இதயக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர். சத்துருக்கொண்டான், வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மைலந்தனை, வீரமுனை, உடும்பன்குளம், மண்டைத்தீவு, கொக்குத்தொடுவாய், திருகோணமலை போன்ற இடங்களில் பல புதைகுழிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
சட்டம் சமமாகச் செயற்படுமாயின், இப்புதைகுழிகளை அறிவியல் பூர்வமாக இலகுவாகக் கண்டறிய முடியும்.
அரச பயங்கரவாதம்
தொல்லியல் அகழ்வுகள் மூலம் கலாசாரத் திரிபுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், மனிதப் புதைகுழிகளைக் கண்டறியும் விடயத்தில் காட்டப்படும் ஆர்வம் மிகமிகக் குறைவாகவே உள்ளது.
இதனை அரசு முறையாக முன்னெடுத்து, சட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்தால் இனவழிப்பு, அரச பயங்கரவாதம் என்பவற்றுக்கான கோரமான முகங்கள் வெளியில் தெரிந்துவிடும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, தமது அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பதை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.
செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகளை அகழ்வு செய்து, முந்தைய அரசாங்கங்களின் முகத்திரையைக் கிழிக்க முன்வர வேண்டும். அதன் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். மேலும், கடந்த கால அரசாங்கங்களின் கோரமான முகங்களை வெளிக்காட்டவும் முடியும்.

ஜே.வி.பி. முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலை தொடர்பாக, அவரது மகன் நீதியைத் தேட முயற்சிப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.
யூகோஸ்லாவியாவை ஆட்சி செய்த ஸ்லோபோடான் மிலோசவிக் என்ற ஜனாதிபதி, தனது இனத்தைச் சேர்ந்த சேர்பியப் படையினரைக் கொண்டு சிறுபான்மை குரோஷியர்களை இனவழிப்புக்கும், பெண்களைப் பாலியல் துர்நடத்தைக்கும் உள்ளாக்கினார்.உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.
பின்னர் சர்வதேசத் தலையீட்டின் மூலம் குரோஷியர்களுக்கு நீதியின் பார்வையில் நியாயம் கிடைத்தது.
குற்றம் செய்த ஜனாதிபதி மற்றும் தளபதிகள் பாரிய தண்டனைகளைப் பெற்றனர். இவையெல்லாம் சிந்திக்க வேண்டிய படிப்பினைகளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்கின் தொலைபேசியில் ஈரான் தாக்குதல் காணொளிகள்..! கிடைக்கப்பெற்றுள்ள பகீர் வாக்குமூலம்..