பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம் எதற்கானது - யாருக்கானது!
இன்று காஸாவில் தொடங்கி விரிவடையும் அரபு - இஸ்ரேலியப் போரினை வெறுமனே மேலெழுந்த வாரியாகப் பார்க்காது அதனை வேரிலிருந்து விழுதுவரை பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் போராடும் ஈழத்தமிழருக்கு உண்டு.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்குலகம் சார்பில் தனது கடற்படையை ஏடன் குடாவுக்கு அனுப்பி வைத்துள்ளதன் சூத்திரத்தை தமிழ் மக்கள் பெரிதும் புரிந்துகொள்ள வேண்டிய அளவிற்கு இந்தப் போர் தமிழரின் நலன்களோடும் தொடர்புறுகிறது.
ரணில் மேற்கொண்டுள்ள மேற்படி கடற்படை நகர்த்தலானது எதிர் காலத்தில் தமிழருக்கு எதிரான ஒரு வியூகமும் நிலையெடுப்பும் ஆகும்.
பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம் என்பது யூதர்களுக்கும் பாலஸ்தீனிய இஸ்லாமியர்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது உலகளாவிய அரசியலை தமது கைக்குள் தொடர்ந்து வைத்திருப்பதற்கான மூலோபாயத்தின் ஓர் அங்கம்.
மனித இனமும் யுத்தமும்
இந்த யுத்தம் காணப்படும் உலக ஒழுங்கை தொடர்ந்து பேணுவதற்கான யுத்தம். எனவே இந்த யுத்தமானது வெறுமனே ஒரு குறுகிய நிலப்பரப்புச் சார்ந்த புவிசார் அரசியல் யுத்தம் அன்று.
இது உலகம் தழுவிய அரசியல் ஆதிக்கத்தின் ஒரு பகுதி. அது மாத்திரமன்றி இது ஒரு தொடர் வரலாற்று பகை தீர்ப்பு போராகவும் காணப்படுகிறது.
மனித இனம் கூட்டாக, சமூகமாக வாழத் தொடங்கிய போது யுத்தமும் அரசும் தோன்றி விட்டது. மனிதன் பிறப்பெடுக்கும் போதே தோன்றி விட்டது.
பலப்பிரயோகம், ஆக்கிரமிப்பு என்பன பெண்களை, பொருட்களை, செல்வத்தை, கைப்பற்றுவதற்காகவே பயன்படுத்தப்பட்டன. அரசுகள் தோன்றிய போது மனிதர்களின் தேவைகள் அதிகரித்தன.
மனிதத் தேவைகளுக்கான பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தன. எனவேதான் பிறரிடம் இருந்து பலாத்காரத்தின் மூலம் பொருட்கள் சூறையாடப்பட்டன.
இவ்வாறு பொருட்களை செல்வத்தை கொள்ளை கொள்ளுவதற்கு யுத்தம் தேவைப்பட்டது. இரண்டு பலம் மிக்க சக்திகள் எதிர் -- எதிர் முனையில் இருக்கின்ற போது பலப்பிரயோகம் செய்ய முடியாத நிலையில் இருதரப்பும் பேரம் பேசி பொருட்களை கைமாற்றிக் கொண்டன.
ஆகவே யுத்தத்தின் பிரதியீடு வர்த்தகமாகும். இவ்வாறு இருதரப்பும் தத்தமது நலன்களை அடைய முடியாத போது தவிர்க்க முடியாது யுத்தத்துக்கு செல்ல வேண்டியதாகிறது.
எனவே பலாத்காரம் , கொள்ளை , யுத்தம், வர்த்தகம் என்பவை மனித இன வரலாற்றின் தவிர்க்கப்பட முடியாத நிகழ்ச்சிப் போக்காக அமைந்து காணப்படுகிறது.
எனவே மனித இனம் உள்ளவரை இந்த பூமியில் யுத்தங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. இன்றைய உலகின் சக்தி வளங்களை பெருமளவு கொண்டுள்ள பிராந்தியமாக மேற்காசியாவும் வட ஆபிரிக்க பிராந்தியமும் காணப்படுகின்றன.
இஸ்லாமிய நாடுகள்
இந்தப் பிராந்தியத்தின் எண்ணெய் வளம் இந்த உலகின் இருப்பிற்கும் செயற்பாட்டிற்கும் அத்தியாவசியமானது. இந்த வளங்களை வர்த்தகரீதியாகக் கொள்ளை இடுவதற்கு இன்றைய சக்தி வாய்ந்த நாடுகள் முயற்சிக்கின்றன.
அந்த வர்த்தக கொள்ளைக்கு இஸ்லாமிய உலகத்தால் தடைகளும் தடங்கல்களும் இடையூறுகளும் ஏற்படுகின்ற போது அவ்வப்போது யுத்தங்கள் தவிர்க்க முடியாதவையாய் உருவாகின்றன.
மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க பிராந்தியம் உள்ளிட்ட பகுதி இன்று அரபு உலகம் என வரையறை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் 17 அராபிய நாடுகளும் ஒரு பாரசீக நாடும் (ஈரான்) உள்ளன.
வட ஆப்பிரிக்காவில் 8 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இந்த 26 மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கி இந்த பிராந்தியத்தில் 53 கோடி மக்களையும் உள்ளடக்கிய பகுதி இஸ்லாமிய உலகென்று அழைக்கப்படுகிறது.
இந்த அரபு - பாஸ்தீன - இஸ்லாமிய உலகத்தின் நடுவில் 60 லட்சம் யூதர்களைக் கொண்ட ஒரு யூத தேசம் இஸ்ரேலும் இருப்பது என்பது இலகுவானது ஒன்று அல்ல.
எனினும் இஸ்ரேல் தன்னை எவ்வாறு தற்காத்துக் கொண்டு இந்த பிராந்தியத்தில் கடந்த 75 ஆண்டுகளாக நிலைத்து உள்ளது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்ரேலியர்கள் - இஸ்லாமியர்கள்
இஸ்ரேலியர்களும் இஸ்லாமியர்களும் பலமான மத அடிப்படைவாத தத்துவங்களைக் கொண்டுள்ளார்கள் உலகில் கானப்படும் எல்லா மதங்களும் தத்தமக்கு இறைவனே இறைதூதர்களை அனுப்பி தத்துவ நூல்கள் உருவாக்கியதிக நம்புகின்றன.
அனைத்து மதங்களும் சமூகத்திற்கு தந்திருக்கும் தத்துவம் சார்ந்த கருத்தியல் மிக வலுவானதாகவும் மதம் சார்ந்தவர்களால் மிக இறுக்கமாக கடைபிடிக்கப்படுவதாகவும் காணப்படுகிறது.
ஒவ்வொரு மதங்களுடைய தத்துவங்களும் சரியோ -பிழையோ, நல்லதோ- கெட்டதோ அவற்றை அவரவர் முழுமையாக நம்புவதாகவும் உள்ளன.
அது அந்த மக்களை வழிநடத்திச் செல்லும் சக்தியாகவும் விளங்குகின்றது. தீர்க்கதரிசி மோசஸ் அவர்களின் யூதேய தத்துவ நூலான தோரா (The Torah Scroll) யூத மக்களை இஸ்ரவேலில் வழிநடத்தும், வழிநடத்திச் செல்லும் பலம் பாய்ந்த தத்துவமாக காணப்படுகிறது.
அது எதிரிகள் மீது "கண்ணுக்கு கண், காதுக்கு காது, பல்லுக்குப் பல்" என்ற அடிப்படையில் தத்துவத்தைச் சொல்கிறது.
எனவே அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் எந்த தயவு தாட்சண்யமும் இன்றி கடுமையாக போரிடுவர் அல்லது பழி தீர்ப்பர்.
இஸ்லாமியர்கள்
அவ்வாறே இறைதூதர் முஹம்மது நபிகள் நாயகத்தின் குர்ஆன் (கிபி 609- 632) கடவுளிடமிருந்து முகமதுவுக்கு வெளிப்படுத்தப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
அதுவே இஸ்லாமியர்களை அரேபிய பிராந்தியத்தில் வழிநடத்திச் செல்லும் சக்தி வாய்ந்த தத்துவமாக நிலவுகிறது. இஸ்லாமியர்களுக்கு இன்னொரு இஸ்லாமியன் "சகோதரன்" ; மற்றைய மதத்தினர் "காபீர்கள்" என அழைக்கிறார்கள்.
ஆகவே ஒரு இஸ்லாமியன் தாக்கப்படுகின்ற போது இன்னொரு இஸ்லாமியன் அவனுடைய சகோதரன் என்ற வகையில் நிலைப்பாடு எடுக்கிறான்.
இந்தவகையில் எந்த ஒரு இஸ்லாமியன் மீதும் உலகின் எந்தப் பகுதியில் தாக்குதல் நிகழ்தாலும் அதற்கு எதிர்ப்பலைகள் இஸ்லாமிய உலகத்தில் வெளிப்படும்.
அடுத்து வரலாற்று ரீதியாக பார்த்தால் உலகின் முதலாவது பேரரசை கட்டியவர்கள் இந்த இலாமியப் பூமியில் தோன்றியவர்கள் . அந்தப் பேரரசின் பெயர் ஆற்காட்.
அது இன்றைய மத்திய ஈராக்கியப் பகுதியாகும். அந்த உலகின் முதலாவது ஆக்காட் பேரரசு சிரியா உள்ளடங்கலாக துருக்கி வரை பாரசிகத்தின் ஒரு பகுதி வரை படர்ந்து இருந்தது.
யுத்தத்தின் ஆரம்பம்
பின்நாளில் பாரசீகப் பேரரசு தான் முதன் முதலில் கி.மு. 5ஆம் நூற்றாண்டு கிரேக்கத்தின் மீது பெரிய ஒரு படையெடுப்பை செய்தது.
அந்தப் படையெடுப்பில் முதலில் பாரசிகர் வெற்றி பெற்றாலும் இறுதியில் முழு அளவிலான தோல்வியைத் தழுவிக்கொண்டனர்.
அந்தப் போர் வெற்றியை உலகின் முதலாவது வரலாற்று ஆசிரியரான ஹெரோடோடஸ் (கிமு 425) விஸ்தாரமாக எழுதியுள்ளார். "" எழுதுகிறார்.
Herodotus, The Histories. இந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இன்றைய இஸ்லாமிய உலகத்துக்கும் அமெரிக்கா தழுவிய மேற்குலகத்துக்குமான யுத்தம் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது.
அந்த யுத்தத்தின் தொடர்ச்சிதான் இன்று காசா நிலத் தொடரில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலான யுத்தமாக வந்து நிற்கிறது.
எனவே பலஸ்தீன - இஸ்ரேல் யுத்தத்தினை ஒரு தத்துவார்த்த கண்ணோட்டத்திலும், அதேநேரத்தில் வரலாற்று கண்ணோட்டத்திலும் கூடவே மறுபுறத்தை உலகளாவிய ஆளுகை மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும், புவிசார் அரசியலின் ஒரு பகுதியாகவும் , உலகளாவிய வர்த்தகப் போட்டியின் தலையாய கேந்திர ஸ்தானம் போன்ற அடிப்படையிலும் அலசி ஆராய வேண்டும். அதனை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
இரண்டாம் பகுதியில் தொடரும்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 23 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.