ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து வெளியேற அனுமதி : இஸ்ரேல் முன்வைத்துள்ள யோசனை
பரந்துபட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கும் யோசனையொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் போரானது நான்கு மாதங்களாக நீடிக்கின்ற போதிலும் ஹமாஸ் அமைப்பினை முற்றாக அழிக்க முடியாமல் இஸ்ரேல் உள்ள சூழ்நிலையிலேயே இவ்வாறானதொரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள்
இஸ்ரேல் இதுவரை ஹமாசின் முக்கிய தலைவர்கள் எவரையும் கைதுசெய்யவில்லை, ஹமாசின் போரிடும் திறன் மிக்க 70 வீதமான உறுப்பினர்கள் இன்றுவரை உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே ஒக்டோபர் தாக்குதலின் சூத்திரதாரிகள் என கருதப்படும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது.
காசாவிலிருந்து ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் வெளியேறினால் ஹமாஸ் அமைப்பின் காசா மீதான பிடியை அது பாதிக்கும் எனவும் வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைக்க முடியும் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் பாலஸ்தீனத்திற்கு வெளியே பல மத்தியகிழக்கு நாடுகளில் ஹமாஸ் தலைவர்கள் வசிக்கின்ற நிலையில் இஸ்ரேலின் இந்த யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |