22 வருடங்களுக்குப் பின்னர் தீர்ப்பு - மூதூர் மக்கள் வங்கி வழக்கில் 40 இலட்சம் ரூபாய் செலுத்த உத்தரவு
திருகோணமலை - மூதூர் மக்கள் வங்கியில் இடம்பெற்ற பண முறைகேடு தொடர்பான வழக்கில், சுமார் 22 வருடங்களுக்குப் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் நேற்று (06) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் பணத்தை நேர்மையற்ற முறையில் கையாண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு, மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய 40 இலட்சம் ரூபாய் பணத்தை செலுத்துமாறும், ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என். எம். எம். அப்துல்லாஹ் முன்னிலையில், வழக்கின் தண்டனை தொடர்பான விசாரணை இடம்பெற்றதையடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்டுள்ள தண்டனை
கடந்த 1998ஆம் ஆண்டு மூதூர் மக்கள் வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பண முறைகேடு தொடர்பில், வங்கியில் கடமையாற்றிய உத்தியோகத்தர் உள்ளிட்ட நான்கு எதிரிகளுக்கு எதிராக பணத்தை நேர்மையற்ற முறையில் கையாண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய 40 இலட்சம் ரூபாய் பணத்தையும் செலுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, இரண்டு எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாகவும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.