நிகழ்நிலை காப்புச் சட்டம் அரச நிறுவனங்களுக்கு பாரிய அச்சுறுத்தல்
சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டால், அது அரச நிறுவனங்களுக்கே பெரும் பாதிப்பாக அமையும் என தொழில்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், அரசாங்கம் இன்று (23.01.2024) சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் நாளை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைநிறுத்தும் அபாயம்
இந்நிலையில், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாளை முதல் சமூக ஊடக நிறுவனங்கள் இலங்கை அரச நிறுவனங்களுடனான அனைத்து தகவல் தொடர்பு மற்றும் கூட்டுத் தொடர்புகளையும் துண்டிக்க வாய்ப்புள்ளது.
இதன் விளைவாக, மெட்டா (பேஸ்புக்), யூடியூப், கூகுள், எக்ஸ் மற்றும் ஆசிய இணைய கூட்டணியின் பிற அங்கத்துவ வலையமைப்புகள் அரசு நிறுவனங்களுடனான அவர்களின் தற்போதைய சிறப்பு தொடர்பு மற்றும் கூட்டு சேனல்களை இடைநிறுத்தும் அபாயம் ஏற்படும்.
மேலும், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமான ஆசிய இணைய கூட்டணி (AIC), பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதுடன் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளும் இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு
இந்நிலையில், கடந்த ஜனவரி 8 ஆம் திகதி, AIC சட்ட மூலத்தை நிராகரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன் சட்டமூலத்தின் அசல் வடிவம் நாடாளுமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் ஒத்துழைக்க முடியாது என்றும் வலியுறுத்தியிருந்தது.
எனவே, நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும், தொழில்நுட்ப நிறுவனங்கள், பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவு, கணினி குற்றங்கள் தொடர்பான அவசர நடவடிக்கை மையம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுடனான தொடர்பை நிறுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது கணினி மற்றும் சமூக ஊடக குற்ற வழக்குகளில் நடந்து வரும் பொலிஸ் விசாரணைகளை கூட பாதிக்கலாம் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |