சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பிக்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
பௌத்தத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ,சர்ச்சைக்குரிய காவி அங்கி அணிந்த துறவி இராமண்ண மகா நிகாயா துறவறத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தை இலங்கை இராமண்ண மகா நிகாய மகாநாயக்க தேரர் வண.மகுலேவே விமலபிதான தேரர் பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
தீர்மானம்
இலங்கை இராமண்ண மகா நிகாயாவின் சங்க சபை குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது.
இலங்கை ராமண்ணா மகா நிகாயாவின் காரக மகா சங்க சபை 15 டிசம்பர் 2023 அன்று சர்ச்சைக்குரிய துறவியை இராமண்ண மகா நிகாயாவிலிருந்தும் துறவறத்திலிருந்தும் வெளியேற்றுவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்தது.
விளக்கமறியல்
தன்னை ‘விஸ்வ புத்தர்’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் துறவி, கடந்த ஆண்டு டிசம்பரில், சமூக ஊடகங்களில் பௌத்தத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) மீண்டும் கைது செய்யப்பட்ட குறித்த பிக்குவை ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் சுனில் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.