ஒன்லைன் வியாபாரமும் பறிபோன உயிர்களும்...!
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று இளைஞர், யுவதிகள் விரைவாக உழைத்து திடீர் பணக்காரராக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் திரிவதை அவதானிக்க முடிகிறது.
அதற்காக சில தவறான பாதைகளையும் தேர்தெடுத்து அது ஆபத்தில் முடிவதையும் அவதானிக்க முடிகிறது.
போதைப் பொருள் விற்பனை, கட்டப் பஞ்சாயத்து, வாள்வெட்டு, மீற்றர் வட்டி, ஒன்லைன் வியாபாரம், பிரமிட் வியாபாரம் என அந்த பட்டியல் நீண்டு செல்கிறது.
கிரிப்டோகரன்சி வியாபாரம்
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றும் புதிய அரசாங்கத்தினால் அண்மையில் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவால் முதல் கட்டமாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கு எதிராக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒன்லைன் வியாபாரமான கிரிப்டோகரன்சி வியாபாரம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக அலசுதே இந்த பத்தியின் நோக்கமாகும்.
கிரிப்டோகரன்சி என்பது ஒரு டிஜிட்டல் கட்டண முறையாகும். இது பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதற்கு வஙகிகளை சார்ந்து அமைந்திருப்பதில்லை. இதில் யாரும் எங்கும் பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.
நிஜ உலகில் உடல் பணமாக எடுத்துச் செல்லப்படுவதற்குப் பதிலாக, கிரிப்டோகரன்சி கொடுப்பனவுகள் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை விவரிக்கும்.
இவை ஒன்லைன் தரவுத்தளத்தில் டிஜிட்டல் உள்ளீடுகளாக மட்டுமே உள்ளன. கிரிப்டோகரன்சி டிஜிட்டல் வாலட்களில் மட்டுமே சேமிக்கப்படுகிறது.
பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க குறியாக்கத்தைப் பயன்படுத்துவதால் கிரிப்டோகரன்சி என பெயரைப் பெற்றது.
ஒன்லைன் வியாபார நடவடிக்கைகளின் போது இது பயன்படுத்தப்படுகிறது. உலகின் முதல் கிரிப்டோகரன்சி பிட்காயின் ஆகும். இது 2009ல் நிறுவப்பட்டது. இன்றும் மிகவும் பிரபலமானது.
பலரை வாடிக்கையாளராக்கி மோசடிகள்
கிரிப்டோகரன்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவதற்கு காரணம் லாபத்திற்காக வர்த்தகம் செய்வதாகும். ஆனால் அதனால் தமது பணத்தை இழந்து நட்டம் அடைத்தவர்களும் பலருண்டு.
காலத்திற்கு காலம் பல்வேறு பெயர்களில் பல்வேறு பொறிமுறை ஊடாக இந்த ஒன்லைன் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு பலர் நட்டம் அடைந்துள்ளார்கள்.

அரசாங்கம் இவ்வாறான திட்டங்களுக்கும், பிரமிட் வியாபாரத்திற்கும் என்ன தான் தடையைப் போட்டாலும் அதனையும் மீறி அதில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்கள் பலர். சமூக ஊடகங்கள் ஊடாக சூட்சுமமான முறையில் பலரை வாடிக்கையாளராக்கி இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய 30 வயதுடைய ராஜ்குமார் என்ற இளம் குடும்பஸ்தரான இளைஞர், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஏற்பட்ட பாரிய நிதி இழப்பு காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டார்.
கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஏற்பட்ட பெரும் இழப்பால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர் யாழ்ப்பாணம், குப்பிளான் பகுதியைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் சுகாதார சேவை முகாமைத்துவ அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.
குறித்த இழப்பால் மனமுடைந்த இளைஞர் தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டார். தெல்லிப்பளைப் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பங்குச் சந்தைகளிலும் ஒரு பெரிய வீழ்ச்சி
சீனாவிலிருந்து வரும் அனைத்து 'முக்கியமான மென்பொருட்களுக்கும்' அமெரிக்கா புதிய 100tவீத வரி விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ட்ரம்பின் அறிக்கை கிரிப்டோகரன்சிகள் மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் ஒரு பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கிரிப்டோகரன்சிகள் மீது முதலிட்ட பலர் கடும் நட்டம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

அதில் குறித்த இளைஞரும் நட்டமடைந்திருந்தார். படித்த ஒரு இளைஞர், அரச சேவையாளர் எடுத்த இந்த விபரித முடிவு அனைவரது கவனத்தையும் பெற்றிருந்ததுடன், இந்தச் செய்தி பரவலாகப் பேசப்பட்டு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் அபாயங்கள் குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பி. சத்தியமூர்த்தி, இந்த சம்பவம் விசித்திரமானது மற்றும் மிகவும் சோகமானது என்று கூறி சமூக ஊடகங்களில் ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக, பல இளைஞர்கள் சட்டவிரோதமான ஒன்லைன் வர்த்தகங்கள் மற்றும் விரைவான பணத்தைப் பெருக்கும் திட்டங்களில் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் அம்பாறை மாவட்டத்தில், இதேபோன்று ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் விபரீத முடிவு எடுத்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
கைத்தொலைபேசி ஊடாக ஒன்லைன் வியாபார செயற்பாட்டில் ஈடுபட்ட முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது - 20) என்ற இளைஞர் தவறான முடிவெடுத்து ஒரு வகை மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். கணக்காளர் ஆக பணி புரிந்த இந்த இளைஞனின் இழப்பு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுபோன்ற ஒன்லைன் வர்த்தகங்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல இளைஞர்கள் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல நிதி பிரமிட் திட்டங்களும் 'ஒன்லைன் வர்த்தகம்' என்ற பெயரில் இளைஞர்களை ஏமாற்றி வருகின்றன. இவை முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதுடன், கடன் சுமைகளை உருவாக்குவதாகவும் அறியப்படுகிறது.
சட்டவிரோத ஒன்லைன் வியாபாரங்கள்
கிரிப்டோகரன்சி மதிப்பானது எப்போதும் குறையாது என்ற நம்பிக்கையில் பலர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக கிரிப்டோ சந்தையிலும் நிலையற்ற தன்மை இருந்து வருகின்றது.
கிரிப்டோகரன்சியின் விலை, சந்தை உணர்வுகள் மற்றும் திடீர் நிகழ்வுகளால் சில நிமிடங்களிலேயே அல்லது ஒரு மணிநேரத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் வரை வேகமாக ஏற்ற இறக்கமடையலாம்.

கிரிப்டோகரன்சியை மைய வங்கிகளோ அல்லது அரசாங்கங்களோ கட்டுப்படுத்துவதில்லை. எனவே, சந்தையில் ஏதேனும் தவறான செயல்கள் நடந்தால், முதலீட்டாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும்.
பிரபலங்கள் போல நடித்தும், அதிக லாபம் தருவதாக உறுதியளித்தும், இலவசப் பணம் தருவதாகவும் கூறி மோசடி செய்பவர்கள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் அதிகம் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் இளம் முதலீட்டாளர்கள், அதன் முழு அபாயங்களையும் அறியாமல் இருக்கலாம். கிரிப்டோகரன்சியை சேமிக்கும் 'வாலெட்'-களின் தனிப்பட்ட விசையை இழந்தால், அதனுள் இருக்கும் கிரிப்டோகரன்சிகளை மீண்டும் பெற முடியாது.
இதனால் பயனர் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும் இளம் முதலீட்டாளர்கள், அதன் அபாயங்கள் குறித்து முழுமையாக அறிந்திருப்பது மிகவும் அவசியம்.
இது குறித்த நிதி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என நிதித்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, திடீர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படும் இளைஞர், யுவதிகள் தாம் தெரிவு செய்யும் பாதை சரியானதா?, சட்டபூர்வமானதா?, பாதுகாப்பானதா? என சிந்தித்து செயற்பட வேண்டும்.
மறுபுறம் பிரச்சனைகளுக்கான தீர்வு தற்கொலை அல்ல. உலகில் பிரச்சனைகளை எதிர் நோக்காத மனிதர்களே இல்லை. அவர்கள் அனைவரும் தவறான முடிவெடுத்தால் இந்த உலகமே வெறுமைபாகிவிடும்.
இதனை இளம் சமூகம் உணர வேண்டும். அரசாங்கமும் இத்தகைய சட்டவிரோத ஒன்லைன் வியாபாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகளை கொண்டு வந்து தனது தொழில்நுட்ப பிரிவை விஸ்தரிக்க வேண்டும். இவையே, இவ்வாறானதொரு இன்னுமொரு இழப்பு ஏற்படாமல் தடுக்க உதவும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam