முல்லைத்தீவில் பல வருடங்களாக பயன்படுத்தாது கிடக்கும் பழம்பாசி சந்தை (Photos)
பழம்பாசிக் கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்டது.
அந்த கிராமத்தில் சந்தைக்கான கட்டடத்தொகுதி ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது.
வழங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை இது இயங்கவில்லை. கட்டடம் மட்டும் இருக்கிறது.
ஜப்பான் மக்களின் உதவியின் கீழ் உருவான கட்டடம்
இந்த சந்தைக்கட்டடத் தொகுதி ஜப்பான் மக்களின் உதவியின் கீழ் வாழ்வாதாரத்திற்கும் சமூகவலுவூட்டலுக்குமான உதவித்திட்டம் 2016 - 2017 மூலம் நிதி வழங்கலினால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஏழு வருடங்களாக சந்தை கட்டடம் இருந்த போதும் சந்தை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
கட்டடத்தொகுதி கையளிப்பு நிகழ்வையொட்டி சில நாட்கள் நடைபெற்ற சந்தை மாதிரி அப்படியே காணாமல் மறைந்து விட்டது.
மக்களின் பதில்
இந்த சந்தைக்கட்டடத் தொகுதி இயங்காமை தொடர்பில் மக்களிடையே கேட்டபோது உரிய பொறுப்புணர்சியுடனான பதில்கள் கிடைக்கவில்லை. பொது அமைப்புக்கள் மீது குற்றம் சாட்டிவிடுகின்றனர்.
சந்தைகள் பிரதேசசபைகளினால் நெறிப்படுத்தப்படுகின்றன. இந்த சந்தை இயங்காமை தொடர்பில் பொறுப்பான பதில்களை பெறமுடியவில்லை.
தேவையற்ற கட்டடத்தொகுதியாக இது இருக்கின்றது. அக்கிராம மக்கள் இதனை பயன்படுத்தவில்லை. அப்படியென்றால் அவர்களுக்கு அது தேவைப்படவில்லை.
தேவைப்படாத ஒன்றை கொடுப்பதை விட தேவைகளை அறிந்து அவற்றின் முக்கியத்துவத்திற்கேற்ப வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அப்போது தான் பணத்தினை முறையாக பயன்படுத்த முடியும். அந்த கிராமமும் வளர்ச்சி நோக்கிச் செல்லும்.
பயனற்று உள்ள கட்டடங்கள்
இந்த சந்தைக்கட்டடத் தொகுதி வழங்கப்பட்டதன் பின்னர் அந்தக் கிராமத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட கட்டடத் தொகுதியாக பப்பாசிச் சங்கத்தின் பழங்கள் பதனிடும் கட்டடத் தொகுதி இருக்கிறது. அந்தக் கட்டடத் தொகுதியும் இப்போது பயன்பாடற்ற முறையிலேயே கிடக்கிறது.
மக்களின் போக்கும் பொறுப்புணர்ச்சியும் கேள்விக் குறியாகிறது. அரசாங்க நிதி ஒதுக்கீடுகளில் இருந்து பெறப்படும் பணத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அடுத்தடுத்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்த கூடியதாக இருக்கும்.
அப்போது தான் கிராமம் வறுமையில் இருந்து மீண்டெழும்.
இந்த பழம்பாசிக் கிராமம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களை அதிகம் கொண்டுள்ள கிராமம் ஆகும். இங்கே விவசாயத்தை நம்பியே மக்களின் வாழ்வாதாரம் முன்னகர்த்திச் செல்கின்றது.
பயன்பாடுடையவற்றுக்கு நிதி ஒதுக்கீடு
பொருந்தாத போக மழையினாலும் காட்டு யானைகளின் தாக்கத்தினாலும் விவசாயச் செய்கையால் தேறிய இலாபம் மிகவும் குறைவானளவில் கிடைக்கிறது.
இவ்வாறிருக்கையில் மக்கள் தங்களுக்கு அதிக பயன்பாடுடையவற்றிற்காக நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தும் படி வழிகாட்டப்பட வேண்டும்.
இவை தொடர்பாக கவனமெடுக்கப்படவில்லை என்றால் நாளைய கிராமங்கள் தொடர்ந்தும் வறுமைப்பட்ட கிராமங்களாகவே நீடித்துச் செல்லப் போகின்றன.
பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயற்படுவதே பெறுமதியை கூட்டிச் சென்று வளமாக மக்களை வாழவைக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |