ஹிட்லரின் பாதையில் அநுரவின் அரசாங்கம்:ரணில் கடும் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எதிரணியினருடன் அரசியல் ரீதியான எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் மேடைகளில் கருத்துத் தெரிவித்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
அத்தோடு, தேசிய மக்கள் சக்தி அரசின் தற்போதைய செயற்பாடுகளுக்கு வரலாற்று உதாரணங்களைக் கொண்டு பலத்த கண்டனமும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "1933 ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்தபோது, அவருக்கு 50 வீதத்துக்கும் அதிகமான ஆதரவு இருக்கவில்லை. ஹிட்லரின் கட்சி வெறும் 44 வீதமான வாக்குகளையே பெற்றது.
எனவே, தனது அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஹிட்லர் அன்று எதிர்க்கட்சிகளை அழித்தார். கட்சிகளை மாத்திரமல்லாமல் எதிர்க்கட்சி அலுவலகங்களையும் இல்லாதொழித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், செக்கோஸ்லோவியா மற்றும் ஹங்கேரியைக் கைப்பற்ற வேண்டிய தேவை கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. அங்கு சோவியத் படை மிக வலுவாக வேரூன்றி இருந்தது.
நீதித்துறை
இருப்பினும் செக்கோஸ்லோவியா நிறுவனரின் புதல்வர் வெளியுறவு அமைச்சகக் கட்டடத்தில் நான்காவது மாடி ஜன்னலில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த விடயம் அன்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
ஜனாதிபதியும் அவரது தேசிய மக்கள் சக்தி அரசும் இலங்கையில் தற்போது செய்வது என்ன, ஜனாதிபதி அநுரவுக்கு வெறும் 44 வீதமான வாக்குகளே உள்ளன.
மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. அதனைத் தடுக்கவே அவர் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரவின் மற்றொரு முயற்சி நீதித்துறையை அடிபணியச் செய்வதாகும். குறைந்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க எதிர்க்கட்சிகளை ஒழித்தது போலவே, தேசிய மக்கள் சக்தியும் அதே வழியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குகின்றது. நீதித்துறையைக் கட்டுப்படுத்தவும் இந்த அரசு முயல்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
