போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது! நாமல் ராஜபக்ச கருத்து
ஜெனிவா அமர்வுகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு தமிழ் மக்களை எத்தனை ஆண்டுகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றப் போகின்றார்கள்? சர்வதேச அழுத்தத்தால் இங்கு எதையும் சாதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முற்றாக இரத்து செய்ய கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாக சென்று கையெழுத்து திரட்டும் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு ராஜபக்சக்களின் தலைநகரான ஹம்பாந்தோட்டை தங்காலையில் நடைபெற்றது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அழுத்தம்
அவர் மேலும் கூறுகையில், எதிரணியினரின் போராட்டங்கள் மூலம் சட்டங்களை நீக்க முடியாது. ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. அதேவேளை போராட்டங்களால் ஏற்படும் சர்வதேச அழுத்தங்கள் ஊடாக எதையும் சாதிக்கவும் முடியாது.
ஆட்சி மாறவில்லை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆட்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் மாறினார்களே தவிர ஆட்சி மாறவே இல்லை.
இதை தமிழ் அரசியல்வாதிகளும், சஜித் அணியினரும், காலிமுகத்திடல் போராட்டத்தை
வழிநடத்தியவர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.