ஜெனிவா அமர்வில் சீனா வெளியிட்ட அறிவிப்பு: இலங்கைக்கு கிடைக்கும் பலமான ஆதரவு
ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் சீனா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ (Chen Xu) தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவை
ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
நல்லிணக்கம்
நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது அரசியல்மயப்படுத்தப்பட்டதன் விளைவாகும் என சீனத் தூதுவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை எந்தவொரு நாடும் சாதகமாகப் பயன்படுத்தி சுயலாபம் தேடுவதை எதிர்ப்பதாகவும் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு
அத்துடன், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.