அமெரிக்கா போரில் வெற்றி அடைந்தால் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு
அமெரிக்கா போரில் வெற்றி அடையுமானால் மீண்டும் ஒரு துருவ உலக ஒழுங்கு நிலையே ஏற்படும் என்றும் அது தமிழர்களுக்கு ஏற்றதல்ல என்றும் அரசியல் ஆய்வாளரும் சட்ட தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு, அமெரிக்கா - ஈரான் யுத்தம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை கடந்து உலகளவில் வளரத் தொடங்கியுள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு அருகே அமெரிக்கா நீர் மூழ்கியினால் ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டுள்ளது.
உலகப் போர்
இது உலகப் போராக மாறுமா என்பதை இப்போதைக்கு உறுதியாக கூறிவிட முடியாது. போரின்போக்கு இன்னமும் சில வாரங்களில் தெரியத் தொடங்க உலகப் போராக மாறுமா என்பதை ஊகிக்கலாம்.
உலகப் போராக மாறாது என்றால் யாராவது ஒரு தரப்பு வெற்றி அடைய வேண்டும். அதனை இன்னமும் அடையாளம் காணமுடியவில்லை. ஈரானும் இடைவிடாது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
அது அமெரிக்காவின் படைத்தளங்களுள்ள மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குவதை தொடர்வது தான் அமெரிக்காவைப் பொறுத்த வரை சங்கடமான விடயமாக உள்ளது.

இவ்வாறான ஒரு நிலைவரும் என அமெரிக்கா நினைத்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஈரானைப் பொறுத்தவரை இது வாழ்வா? சாவா? பிரச்சினை. எனவே கடைசி வரை அது போரிட்டுப் பார்க்கவே முயற்சிக்கும்.
ஈரான் சார்பு நாடுகளான சீனா, ரஸ்யா, வடகொரியா என்பவற்றிற்கும் இது இருப்புச் சார்ந்த பிரச்சினை தான். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது போல அந்த நாடுகளை நோக்கியும் யுத்தம் பரவலாம். ஈரான் போரில் வெற்றி கிடைத்தால் அமெரிக்காவின் அடுத்த இலக்கு வடகொரியாவாகவே இருக்கும்.
எனவே இந்த நாடுகள் எப்பாடுபட்டாவது ஈரானைப் பாதுகாக்கவே முயற்சிக்கும். இந்த யுத்தம் தொடர்பில் அமெரிக்கா உள்நாட்டுச் சட்டத்தையோ, சர்வதேச ஒழுங்கமைப்புக்களையோ மதித்தது கிடையாது. எனக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல என அமெரிக்க ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
அமெரிக்க அரசியல் யாப்பின்படி வெளிநாட்டுடன் போர் புரிவதென்றால் சட்டத்துறையான காங்கிரசின் அனுமதி பெறப்பட வேண்டும். அது பெறப்படவில்லை. சர்வதேச சட்டத்தின் படியும், இறமையுள்ள ஒரு நாட்டின் மீது தன்னிச்சையாக போரிட முடியாது. ஐ.நா பொதுச் செயலாளரே இந்த வலிந்த தாக்குதலை கண்டித்திருக்கின்றார்.
முன்னர் ஐ.நாவின் பேரில் அல்லது நேட்டோவின் பேரில் அமெரிக்கா போரிடுவதே வழக்கம். ஈராக், லிபியா போன்றவற்றில் அதனையே பின்பற்றியது. வெனிசுலாவிலும், ஈரானிலும் தன்னிச்சையாக முயன்றுள்ளது. ஐ.நா மூலம் மேற்கொள்வதென்றால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும்.
அங்கு ரஸ்யாவுக்கும், சீனாவிற்கும் வீட்டோ அதிகாரம் இருப்பதால் அது சாத்தியமாகாது. நேட்டோ மூலம் போரிடுவதென்றால் ஐரோப்பிய கூட்டாளிகள் ஒத்துழைக்க வேண்டும் அதற்கும் சாத்தியம் இருக்கவில்லை. பிரித்தானியா ஈரானுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
அந்நாடும் போரில் இறங்கினால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். தவிர பிரிட்டனில் இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர். இதனால் சமூகக் கலவரங்கள் அங்கு உருவாகப் பார்க்கலாம். போர் நீண்ட காலம் நீடிக்குமாக இருந்தால் அதற்கான தயார் நிலையில் பிரித்தானியா இல்லை.
பிரான்ஸ் ஐரோப்பிய யூனியனுக்கென புதிய பாதை இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. ஐரோப்பா சொந்த இராணுவ வலிமையைக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவின் அடிமையாக இருக்க முடியாது எனவும் கூறுகின்றது. இதற்கு வர்த்தக உறவுகள் ஈரானுடன் உண்டு.

ஈரான் அழிக்கப்படால் பொருளாதார நெருக்கடி உருவாகலாம் எனவும் அஞ்சுகின்றது. அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதார தடைகளினால் பிரான்சின் நிறுவனங்கள் பெரு நஸ்டம் அடைந்துள்ளன. தவிர சீனா ஐரோப்பாவின் மிகப்பெரிய கூட்டாளியாக உள்ளது.
சீனாவின் அதிருப்தியை பெறுவதற்கு பிரான்ஸ் தயாராக இல்லை. ஜேர்மனியும் ஏறத்தாழ இதே நிலை தான். ஆபிரிக்க நாடுகளும் ஈரான் பக்கமே உள்ளன. அங்கு பிரான்ஸ் செல்வாக்கிழந்து வருகின்றது. சீனாவும், ரஸ்யாவும் அங்கு தனது செல்வாக்கினை வளர்த்துள்ளன.
இதனாலும் ஒரு தயக்கம் இருக்கின்றது. போர் நீடிக்குமாக இருந்தால் அமெரிக்காவினாலும் அதைத் தாங்கிக் கொள்வது கடினம். அமெரிக்காவின் தேசியக் கடன் 37 ரில்லியன் உள்ளது. இது அமெரிக்கா தேசிய உற்பத்தியில் 120 வீதமாகும். கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ஒரு ரில்லியன் வரை செலுத்துகின்றது. ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா 38 பில்லியன் டொலர்களை இராணு உதவியாக வழங்கி வருகின்றது.
தற்போது போர்ச்சூழல் காரணமாக 14 பில்லியன் டொலர் தொடங்கி 18 பில்லியன் டொலர் வரை அவசரநிதியாக வழங்கியுள்ளது. அயன்டொம் பாதுகாப்புக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவிடப்படுகின்றது. டொலர் பற்றாக் குறை காரணமாக அதனை அச்சடித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
எனவே போர் நீடிக்குமாக இருந்தால் யுத்த நிறுத்தம் நோக்கி நிலைமைகள் வரலாம். ஏற்கனவே அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பல நோக்கங்கள் இருந்தன. அமெரிக்காவின் உலக நோக்கில் சீனாவிற்கான வளங்களை தடுத்து நிறுத்துவது பிரதான நோக்கமாகும்.
அமெரிக்கா போர்களுக்கு சென்று தனது பொருளாதாரத்தை பலவீனப்படுத்திவர சீனா போர் எதற்கும் செல்லாமல் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகின்றது. ஈரானின் எரிபொருள் அதிகளவில் சீனாவிற்கே செல்கின்றது. இரண்டாவது ஜி – 7 அமைப்பை மேவி வளர முயற்சிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதார வளர்ச்சியை வீழ்த்துவதாகும். அது தனி நாணயம் ஒன்றை உருவாக்கவும் முயற்சிக்கின்றது.
டொலரின் செல்வாக்கு வீழ்ச்சி
அந்த நாணயம் உருவாகுமானால் டொலரின் செல்வாக்கு வீழ்ச்சி அடையும். ஏற்கனவே பிரிக்ஸ் நாடுகள் டொலரை தவிர்த்து தங்களது சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சிக்கின்றன.
மூன்றாவது முக்கியமானது தற்போது வளர்ந்து வரும் பல்துருவ உலக ஒழுங்கினை மாற்றி மீண்டும் ஒரு துருவ உலக ஒழுங்கினை கொண்டு வருவதாகும்.
பல்துருவ ஒழுங்கில் அமெரிக்காவின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். இங்கு வரலாறு முன்னோக்கி நகருமே ஒழிய பின்னோக்கி நகருமென்பது சந்தேகம்தான். நான்காவது எரிபொருள் வர்த்தகத்தில் டொலர் நீக்கத்தை தடுத்து நிறுத்துவதாகும். ஈரான் போன்ற நாடுகள் டொலரைத் தவிர்ந்து அந்தந்த நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சிக்கின்றன.

டொலரின் வீழ்ச்சி அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவைக் கொண்டு வரும் என அமெரிக்கா அஞ்சுகின்றது. இஸ்ரேலைப் பொறுத்தவரை பாலஸ்தீனத்தை மறுத்து ஓர் அரசுத் தீர்வை நிலை நாட்டுதல் முக்கிய நோக்கமாகும். இதற்கு பிரதான தடையாக இருப்பது ஈரான் தான். இதுவே ஹமாஸ், ஸ்புல்லா, கௌதி இயக்கங்களுக்கு ஆயுத உதவிகளை செய்து வருகின்றது.
எனவே ஈரான் அழிக்கப்பட்டால் தான் தனது செல்வாக்கினை மத்திய கிழக்கில் நிலை நிறுத்தலாம் எனக் கருதுகின்றது. போரின் தாக்கம் உலக ரீதியானது. எரிபொருள் இல்லாவிட்டால் உலகமே இயங்குவது கடினம். ஈரான் பிரதான எரிபொருள் பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது.
உலக எரிபொருள் தேவையில் 20 வீதம் இதனூடாகவே இடம்பெறுகின்றது. தினமும் சுமார் 2 கோடி பரல் எரிபொருள் இதன் வழியாக கொண்டு செல்லப்படுகின்றது. சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தமது ஏற்றுமதிக்கு இப்பாதையினையே பயன்படுத்துகின்றன.
கட்டார் இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு முழுமையாக இதனையே பயன்படுத்துகின்றது. இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணையில் 50வீதமும் எரிவாயுவில் 60 வீதமும் இந்தப் பாதையூடாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தப் பாதை இல்லையென்றால் 4500 கிலோமீற்றர் சுற்றி செங்கடல் வழியாக செல்ல வேண்டும். இதற்கு 12 நாட்கள் அதிகமாகத் தேவைப்படும். கப்பல்கள் கட்டணங்களும் அதிகமாக இருக்கும்.
கப்பல்களுக்கான காப்புறுதித் தொகையையும் பன்மடங்கு உயரும். இந்தப் பாதையால் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க பாதுகாப்பளிக்கப் போவதாக கூறினாலும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து கப்பல்களை பாதுகாப்பது கடினமாக இருக்கும். உலகின் பங்குச்சந்தையில் பெரும் சரிவைக் கண்டிருக்கின்றது.
எல்லா நாடுகளிலும் பங்குச் சந்தைகள் மளமளவென்று சரிந்து வீழ்கின்றன. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தங்கத்தில் முதலீடு செய்ய முயல்கின்றனர். இதனால் உலகளாவிய வகையில் தங்கத்தின் விலை அதிகரிக்க போகின்றது.
இலங்கை மீதான தாக்கம்
இலங்கை மீதான தாக்கம் மிகவும் கவலைக்குரியது. பொருளாதாரச் சரிவிலிருந்தும், டித்வா புயல் நெருக்கடியிலிருந்தும் இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகையில் ஈரான் போர் மீண்டும் சரிவைக் கொண்டு வரப் பார்க்கின்றது.
ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைப் பொருளாதாரத்தின் பிரதான பகுதியாகும். அங்கு நெருக்கடி என்றால் இயல்பாகவே இலங்கையின் பொருளாதாரம் படுத்து விடும்.
எரிபொருள் மட்டுமல்ல 50 வீத தேயிலை ஏற்றுமதியும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றது. முதலாவது தாக்கம் எரிபொருள் தட்டுப்பாடு நிலை உருவாகுவதாகும்.
37 நாட்களுக்கான எரிபொருள் சேமிப்பிலிருப்பதாக கூறினாலும் அவை விரைவில் தீர்ந்து விடக் கூடிய நிலையே உள்ளது. இலங்கை தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்வது குறைவு.

இந்தியாவிடமிருந்தும் சிங்கப்பூரிடமிருந்தும் தென்கொரியாவிட மிருந்தும் அதிகளவில் இறக்குமதி செய்கின்றது ஆனாலும் இந்தியாவும், சிங்கப்பூரும், தென்கொரியாவும், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே அதிகளவில் எரிபொருளைப் பெறுகின்றன.
ஏற்கனவே எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசை நிற்கின்றது சமையல் எரிவாயுவைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. கட்டார் தாக்குதல் காரணமாக தனது இயற்கை எரிவாயு நிலையத்தை மூடியுள்ளது. உலகின் 1/5 எரிவாயு தேவையை இதுவே பூர்த்தி செய்கின்றது.
இதை விட எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 13 வீதம் விலை உயரலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் அந்நியச் செலவாணி கையிருப்பைக் கரைக்கப் பார்க்கும். இரண்டாவது சுற்றுலாத்துறை பாதிப்படைவதாகும்.
மத்திய கிழக்கு நாடுகள் தான் ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு மாற்றுத்தரிப்பிடங்களாக உள்ளன. குறிப்பாக துபாய், கட்டார் அபுதாபி என்பன முக்கிய மாறும் தரப்பிடங்களாகும். அவ் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதனால் இலங்கை வந்தவர்கள்; திரும்பிச் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர்.
தற்போது சில விமான சேவைகள் இடம்பெற்றாலும் அவை நிரந்தரமானது எனக் கூற முடியாது. போர் தொடருமானால் புதிதாக சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவடையும். மூன்றாவது மத்திய கிழக்கில் பணிபுரிவோரிடமிருந்து வரும் வருமானமாகும். அந்நியச் செலாவாணி வருமானத்தில் இரண்டாவது இடத்தை இதுவே பிடித்துள்ளது. சுமார் 10 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.
யுத்தம் தொடருமானால் இவ்வருமானம் வீழ்ச்சி அடையும். இறக்குமதிகளை செய்வதற்கு அந்நிய செலவாணியும் இல்லாது போகும். இவர்கள் வேலை இழப்பார்களானால் வேலை இன்மை பிரச்சனையும் உருவாகும். தற்போது நான்காவது பிரச்சனை ஒன்று மேலெழுந்துள்ளது.
கடற்தொழில் புரிவோருக்கு ஏற்பட இருக்கின்ற நெருக்கடியே இதுவாகும். பல நாட்கள் கடலில் நின்று தொழில் புரிவோருக்கு இந்த நெருக்கடி வர வாய்ப்புக்கள் உண்டு.
போர்காரணமாக கடலில் தாக்கப்படக்கூடிய நிலை உருவாகலாம் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் இதனை நேரடியாகவே கூறியுள்ளார். இந்து சமுத்திரத்தில் ஈரானிய கப்பல் தாக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வச்சம் அதிகரித்துள்ளது
கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு கூறியுள்ளார். நீருக்கடியில் ஏவுகணைகள் ஏவப்படக்கூடிய சூழ்நிலைகள் இருப்பதால் இவ் ஆபத்து அதிகமாக இருக்கின்றது.
ஈரான் மீது தாக்குதல்
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான்; மீது தாக்குதல் மேற்கொண்டமை சர்வதேச சட்டத்திற்கும், சர்வதேச விழுமியங்களுக்கும் எதிரானவை ஆகும். எனவே இதனைக் கண்டிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கும் உண்டு.
மக்களுக்கும் உண்டு. இலங்கை அமெரிக்காவுடன் முரண்படக்கூடாது என்பதற்காக இதனை அடக்கி வாசிக்கின்றது. ராஜதந்திர மொழியில்; பேச்சுவார்த்தை மூலம் விவகாரத்தை தீர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
இதே ஜே.வி.பி அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் நாட்டையே அதிர வைக்கக்கூடிய போராட்டத்தை நடாத்தி இருக்கும். ரணில் விக்ரமசிங்க கடுமையான தொனியில் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச மரணமடையும் ஈரான் மக்களுக்காக கவலை தெரிவித்துள்ளார். இக்கவலை அவரது மோசமான குண்டு வீச்சினால் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது வெளிவரவில்லை.
ரவூப்ஹக்கீம் உட்பட முஸ்லிம் தலைவர்கள் வழமை போல கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தமிழ்த் தலைவர்கள் இது பற்றி வாயே திறக்கவில்லை. தமிழ் மக்களை அழிப்பதற்கு ஈரானும் துணை நின்றது என்பதால் அறிக்கை விடுவதை தவிர்த்திருக்கலாம். அமெரிக்காவுக்கு அதிர்ப்தி ஏற்படக் கூடாது எனவும் கருதியிருக்கலாம்.
அமெரிக்கா இந்த போரில் வெற்றி அடையுமானால் மீண்டும் ஒரு துருவ உலக ஒழுங்கு நிலையே ஏற்படும். இது தமிழர்களுக்கு ஏற்றதல்ல. பல்துருவ நிலையே ஏற்றது. குறைந்தபட்சம் இரு துருவநிலையாவது இருக்க வேண்டும். ஒரு துருவ நிலையில் வல்லரசுகள் அரசுகளுக்கு இடையிலான உறவுகளையே முக்கியமாக கொள்ளும்.
ஒடுக்கப்படும் தேசிய இனங்களை கவனத்தில் கொள்ளமாட்டா. இந்தியாவிற்கு கப்பல் அணிவகுப்பிற்குச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றே இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்டுள்ளது. ஒரு கப்பல் மாயமாகியுள்ளது என கூறப்படுகின்றது. இன்னொரு கப்பலுக்கு நீண்ட இழுபறியின் பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் தரிப்பதற்கு இலங்கை அனுமதித்திருக்கின்றது.
தாக்கப்பட்ட கப்பல் இலங்கைக்குள் வர அனுமதி கேட்ட போது இலங்கை மறுத்தபடியால் தான் தாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை விமல் வீரவன்சா குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். இலங்கைக்கு இது சங்கடமான நிலைமை தான். உண்மையில் இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை.
அங்கு தான் கப்பல் அணிவகுப்பிற்காக சென்றிருக்கின்றனர். இது விடயத்தில் கப்பல்களை இந்தியா காட்டிக் கொடுத்து கொடுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்தியா அதை மறுத்துள்ளது. தற்போது இந்தியா சுமக்க வேண்டிய பாரத்தை இலங்கை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
போரின் வலியை அனுபவரீதியாக சுமந்தவர்கள் தமிழ் மக்கள். அமைதி உருவாக வேண்டும் என அவர்களும் பிரார்த்திக்கின்றனர். அமைதி உருவாகுமா? இது தான் இப்போது எழும் கேள்வி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானை கைப்பற்ற நினைத்தால்.. வளைகுடாவை படையெடுத்தவர்களின் இரத்தத்தால் ஓடச் செய்வோம்! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam