கிழக்கு ஆளுனரைப்போல் செயற்படுங்கள்: பி.எஸ்.எம். சார்ள்ஸை சாடிய கடற்தொழிலாளர்கள்
வடக்கு மாகாணத்தில் சட்ட விரோத கடற்றொழில் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கு பல மனுக்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம்(05.03.2024) இந்திய சட்ட விரோத கடற்றொழிலை கட்டுப்படுத்தவும், உள்ளூர் சட்ட விரோத தொழிலை கட்டுத்துமாறும் கோரிய மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருடம் கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு இடம்பெறும் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலுக்கு எதிராக களத்தில் இறங்கி தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளார்.
கடற்றொழில் பிரச்சினை
ஆனால் எமது வடக்கே இடம்பெற்றுவரும் கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் மாகாண ஆளுநருக்கு பல தடவைகள் மனு வழங்கியிருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், வடக்கு பகுதியில் சட்டவிரோத கடல் அட்டைப் பண்ணைகள் இடம்பெறுகின்றது. சட்டவிரோத கடற்றொழில் இடம்பெறுகிறது. அது தொடர்பில் கடற்றொழில் சங்கங்களை அழைத்து ஆளுநர் பேசவில்லை.
நாங்கள் வழங்கும் மனுக்களை மட்டும் ஜனாதிபதி பிரதமருக்கு அனுப்புவதற்காக வழங்கவில்லை. ஆளுநர் என்ற நீதியில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆகவே வடக்கு ஆளுநரிடம் வினையமாக கேட்டுக் கொள்வது யாதெனில் எமது கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் சங்கங்களை அழைத்து ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |