சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பவே முடியாது! சுனில் வட்டகல சுட்டிக்காட்டு
முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபராக இருந்தாலும் அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(03.10.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "நாம் அமைச்சு என்ற வகையில் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
மக்கள் ஆணை
எமது நாட்டில் முன்னர் பிரபல நபர்களைப் பார்த்துச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலமும், பக்கச்சார்பாகச் செயற்பட்ட காலமும் இருந்தது.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பின் 12 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள 'சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம்' என்ற கொள்கையின் அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையும் நிலையில், முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபராக இருந்தாலும், கிராமத்தில் இருக்கும் சாதாரண குடிமகனாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமமாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளோம். நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.