சபாநாயகருக்கு எதிரான பிரேரணை : சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்படவில்லை
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்படுகின்றது என்று ஆளும் தரப்பினால் கூறப்பட்ட போதிலும், இதுவரை அது குறித்து சட்டமா அதிபரிடம் எந்தவொரு ஆலோசனையும் கோரப்படவில்லை என்று களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசுக்குச் சார்பான ஒருசில தனியார் சட்டத்தரணிகளிடம் பெறப்படும் கருத்துகளைச் சட்டமா அதிபரின் உத்தியோகபூர்வ ஆலோசனையாக எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06.11.20260 நடைபெற்ற அமர்வின்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
தொடர்ந்து உரையாற்றுகையில், "சபாநாயகருக்கு எதிராக ஊழல், மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 50 கடுமையான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வகையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்துள்ளன.
ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இடம்பெற்றுள்ளதால் அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என ஆளும்தரப்பு சாக்குப்போக்குகளைக் கூறி வருகின்றது.

நீதிமன்ற விசாரணை என்று ஆளும்தரப்பால் மேலோட்டமாகக் குறிப்பிடப்படுகின்றதே தவிர, பிரேரணையிலுள்ள எந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
சபாநாயகருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஆணைக்குழு விசாரணையை ஒருபோதும் நீதிமன்ற விசாரணை எனக் குறிப்பிட முடியாது.
தனிப்பட்ட ரீதியில் ஆலோசனை
அதேபோன்று, சபாநாயகருக்கு எதிரான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதிலும், அதற்கு இதுவரை உத்தியோகபூர்வ அழைப்பாணைகளோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை.
ஆகவே, இவற்றைச் சுட்டிக்காட்டி நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்காது நிராகரிக்க முடியாது.

சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்துச் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக ஆளும்தரப்பினால் சபைக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நடைமுறையில் இதுவரை சட்டமா அதிபரிடம் எந்தவொரு ஆலோசனையும் கோரப்படவில்லை என்பதே உண்மையாகும்.
அரசுக்குச் சார்பான ஒருசில சட்டத்தரணிகளிடம் தனிப்பட்ட ரீதியில் ஆலோசனை கோருவதை, சட்டமா அதிபரின் உத்தியோகபூர்வ ஆலோசனையாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.