புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மனித உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்! மொட்டுக் கட்சி எச்சரிக்கை
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்தில் தடுப்புக் காவலில் வைக்கும் நேரத்தைக் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ள போதிலும், பொலிஸாருக்குத் தன்னிச்சையான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது மனித உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கிலேயே அரசு இவ்வாறான புதிய அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டு வருகின்றது.

பொதுமக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் முடக்கும் அரசின் இத்தகைய நகர்வுகளுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து உடனடியாக ஒன்றிணைய வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது அதற்கு மாறாக மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வருகின்றது.
புதிய சட்டமூலத்தின் பிரிவு 3இன் கீழ், அரசியல் அல்லது கருத்தியல் சார்ந்த நோக்கங்களை முன்னெடுப்பதே குற்றமாகக் கருதப்படும் ஆபத்தான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் வரம்பற்ற அதிகாரங்கள்
இது அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை முற்றிலும் ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படவுள்ளது. சந்தேகநபர்களை நீண்ட காலம் காவலில் வைக்கும் முழு அதிகாரமும் பொலிஸாருக்கும் நிர்வாகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தடுப்புக் காவல் நேரத்தைக் குறைப்பது பற்றிப் பேசியபோதிலும், பொலிஸாரின் வரம்பற்ற அதிகாரங்கள் மனித உரிமைகளைப் பலியிடும் வகையிலேயே அமைந்துள்ளன.

அத்துடன், ஜனாதிபதிக்குத் தன்னிச்சையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், கிராமப்புற பாதுகாப்பு அமைப்புகள் அல்லது மரண உதவிச் சங்கங்கள் போன்ற சாதாரண சிவில் அமைப்புகளைக் கூடத் தன் விருப்பம்போல் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கும் அபாயம் நிலவுகின்றது. பொலிஸாருக்கு மட்டுமன்றி, சந்தேகநபர்களைக் காவலில் வைக்கும் அதிகாரம் ஆயுதப் படைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இது நாட்டின் சிவில் நிர்வாக நிலையை மேலும் மோசமடையச் செய்யும். வர்த்தக முத்திரைகள் தொடர்பான விடயங்களைச் சட்டவிரோதக் குற்றப்பிரிவுகளின் கீழ் கொண்டு வந்திருப்பது, அரசுக்கு ஆதரவளிக்கும் குறிப்பிட்ட சில பெரு வணிக நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே ஆகும்.
அதேவேளை, அரச தரப்பினர் மீதான ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து எவ்வித நடுநிலையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.
பல தசாப்தங்களாகப் போராடிப் பெற்ற மனித உரிமைகளையும் ஜனநாயகச் சுதந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக பின்னோக்கி இழுத்துச் செல்லும் இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக, கடந்த கால அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் சமூகமாக ஒன்றுபட்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri