பாகிஸ்தான் சர்ச்சைக்குரிய தேர்தல் - மீண்டும் பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் - என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் 2 ஆவது முறையாக தேர்வாகியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம்
பல்வேறு கலவர சம்பவங்களுக்கு இடையே பாகிஸ்தானில் கடந்த மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் பல்வேறு இடங்களை கைப்பற்றிய போதும் முழு ஆதரவு கிடைக்கவில்லை. சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர்.
நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் - என் கட்சிக்கு 75 இடங்களும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டது.
கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு
அதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான தொகுதிகளை கைப்பற்றின.
இதையடுத்து தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கூட்டணி ஆட்சியின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டணி ஆட்சி அமைவது உறுதியான நிலையில் 33-வது பிரதமராக பாக்.முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இன்று பதவி ஏற்க உள்ளார்.
தொடர் கலவர சம்பவங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாக்.முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சி முழு பெரும்பான்மையை பெறத்தவறினாலும் மொத்தமுள்ள 265 இடங்களில் 75 இடங்களை பெற்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.