எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(29.07.2026) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இருதரப்பு உறவு
கடந்த வருட இறுதியில் இலங்கைக்கு ஏற்பட்ட 'டித்வா' அனர்த்த நிலைமையின் போது, அயல் நாடு என்ற முறையில் இந்தியா பெற்றுத் தந்த துரிதமான மற்றும் மனிதாபிமான உதவிக்கு 220 இலட்சம் மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நன்றியையும் பாராட்டுக்களையும் இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொவிட்-19 தொற்றுநோய் பரவற் காலத்திலும், கடுமையான பொருளாதார நெருக்கடியின் பொழுதும் நெருங்கிய அயல் நாடொன்றாக இந்தியா இலங்கைக்கு நல்கிய பெறுமதியான ஆதரவுக்கும் அவர் விசேடமாகப் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்திலும் அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன்புரித் துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இரு தரப்பினரும் இதன்போது விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொட வழக்கில் திருப்பம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமாரின் அதிர்ச்சி சாட்சியம்