முக்கிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய ட்ரம்ப் தடை
தங்களுக்கு எதிராகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி CNN, MS NOW மற்றும் Politico ஆகிய முன்னணி ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி சேகரிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளார்.
தமது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், குறித்த ஊடகங்கள் தமது நிர்வாகத்தைப் பற்றித் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் The New York Times மற்றும் The Washington Post ஆகிய ஊடகங்களும் பொய்ச் செய்திகளையே வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள அவர், வரும் நாட்களில் மேலும் பல ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
நேரடித் தாக்குதல்
ட்ரம்பின் இந்த தீர்மானத்திற்குக் குறித்த ஊடக நிறுவனங்களும் ஊடகப் பாதுகாப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள செய்தி சேகரிக்கும் அடிப்படை உரிமையை அரசோ அல்லது அதிபரோ முடக்க முடியாது எனவும், இந்தத் தடையை சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாகவும் CNN மற்றும் Politico நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பின் படி, ஊடகவியலாளர்களின் செய்திகளின் உள்ளடக்கத்தைக் காரணம் காட்டி வெள்ளை மாளிகைக்கான அணுகலைத் தன்னிச்சையாக மறுக்க முடியாது என 1977 ஆம் ஆண்டைய நீதிமன்றத் தீர்ப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த நடவடிக்கை சுதந்திரமான ஊடகவியலின் மீதான நேரடித் தாக்குதல் என தேசிய பிரஸ் கிளப் உட்படப் பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.