வெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரம்.. காவலில் அடைக்கப்பட்ட 37 சுரங்கத் தொழிலாளர்கள் பலி
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் (Niger State) சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி எடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 37 சுரங்கத் தொழிலாளர்கள், காவலில் இருந்தபோது உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நைஜர் மாநிலத்தின் தலைநகரான மின்னா (Minna) பகுதியில், 'நைஜீரியா பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு' (NSCDC) அதிகாரிகள் சட்டவிரோத தங்கச் சுரங்கங்களுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு NSCDC-ன் சிறை முகாமில் அடைக்கப்பட்டனர்.
வெடித்த போராட்டம்..
அவ்வாறு காவலில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களில் 37 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சிறை முகாமில் ஏற்பட்ட எதிர்பாராத நோய் பரவல் காரணமாகவே தொழிலாளர்கள் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் போதிய காற்றோட்டம் இல்லாத சிறிய சிறை அறையில் (Overcrowded cell), அளவுக்கு அதிகமான நபர்களை அடைத்து வைத்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே இந்த மரணங்களுக்குக் காரணம் எனத் தப்பிய தொழிலாளர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொழிலாளர்களின் மரண செய்தி பரவியதைத் தொடர்ந்து, நீதி கேட்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்னா நகரின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இந்த மோதலில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மின்னா பகுதியில் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க நைஜர் மாநில ஆளுநர் உமர் பாகோ (Umar Bago) உடனடியாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, NSCDC கொமாண்டண்ட் சுபெரு சியாக்கா அனிவியே (Suberu Siaka Aniviye) உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தொழிலாளர்களின் மரணம் குறித்து விரிவான உயர்நிலை விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.