ஹோர்முஸ் பதற்றம்: டோகோ எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்தது ஈரான்
உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் சட்டவிரோதமாக பயணிக்க முயன்றதாக கூறி டோகோ (Togo) நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த 'ட்ரெண்ட்' (Trend) என்ற எண்ணெய் கப்பல், ஈரானின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல்
இதன் போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை, அந்தப் பிராந்தியத்திற்குள் கப்பல் "சட்டவிரோதமாக நுழைந்ததாக" குற்றம்சாட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலின் காரணமாகக் கப்பலில் தீப்பற்றியதையடுத்து கப்பல் உடனடியாக இயக்கத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படையினர் கப்பலைக் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பான UKMTO, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஓமன் நாட்டின் கசாப் (Khasab) பகுதிக்கு வடகிழக்கே சுமார் 16 நவாடிகல் மைல் தொலைவில், அடையாளம் தெரியாத எறிபொருள் (Projectile) தாக்கி ஒரு வணிகக் கப்பலில் பாதுகாப்பு சம்பவம் நிகழ்ந்ததை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பாக உள்ள மாலுமிகள்
கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஈரானிய கடற்படை தளபதி கூறுகையில் "அமெரிக்க இராணுவத்தின் தூண்டுதலின் பேரிலேயே இந்தக் கப்பல் தங்களது கடல் எல்லை விதிகளை மீற முயன்றதாகவும், அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பலும் அழிவையே சந்திக்கும்" எனக் கூறினார்.
பிராந்திய மோதல்களுக்கு மத்தியிலும், ஈரானின் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் கப்பல்களை ஈரான் தொடர்ந்து இலக்கு வைத்து வருகிறது.
தற்போது நடந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்தால், சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும், கப்பல் போக்குவரத்துக்கான காப்பீட்டுச் செலவுகள் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்