மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்
போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றுமொரு மாந்தோப்பு மற்றும் ஆடம்பர வீடு ஒன்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இந்த சொத்துக்கள் பிரபலமான தனியார் கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு நபரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் தம்புள்ளை நகருக்கு அருகில் மாந்தோட்டம் அடங்கிய மூன்று காணிப்பகுதிகளில் உள்ளது.
பினாமி பெயரில் கொள்வனவு
இவற்றில் ஒரு காணிப்பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களுக்காக 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஷிரான் பாசிக் செலவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பினாமி பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தோட்டம் மற்றும் காணிகளை விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன், அந்த காணிகளை பராமரித்து வரும் நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஷிரான் பாசிக் கொள்வனவு செய்த 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றொரு ஆடம்பர வீட்டையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாவரமண்டிய பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆடம்பர வீடு தனியார் கல்வி ஆசிரியரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீட்டில் ஆசிரியரின் தாயார் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்
ஷிரான் பாசிக்கும் அந்தத் தனியார் கல்வி ஆசிரியருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ள பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இது தொடர்பான வேறு பல சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.

அந்த ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இலங்கை திரும்பியவுடன் விசாரணைக்காக உடனடியாக அழைக்கப்படுவார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கை திரும்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. .