மகனின் உயிரை காப்பாற்ற போராடும் இலங்கை தாய் - சவூதி மன்னர்களிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை
சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு சென்று நிலைமை குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இந்த விஜயம் நேற்று(18.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் நம்பிக்கையளித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியுதீன்,
அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியா மன்னர்களிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை.
மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவூதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இதேவேளை, அனோஜனின் மற்றும் பெற்றோர் குடும்பத்தினர் அனுஜனின் விடுதலை தொடர்பில் கொண்டிருக்கின்ற அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் செயற்படுவோம் என்றார்.

சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழரக் கட்சியிடம் கோரிக்கை - அனோஜனின் உயிரைக் காப்பாற்ற போராடும் இலங்கை மக்கள்