சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழரக் கட்சியிடம் கோரிக்கை - அனோஜனின் உயிரைக் காப்பாற்ற போராடும் இலங்கை மக்கள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இலங்கையின் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலாகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(18.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அனோஜனுக்கு மரண தண்டனை
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.

ஒரு இலங்கையரின் உயிர் தொடர்பான விடயம் என்பதால், இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியது அவசியமாகும்.
அனோஜனின் குடும்பத்தினரின் நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவருக்கு சட்ட உதவி கிடைப்பதற்கும், மரண தண்டனையை தவிர்ப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தேவையான இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இந்த விடயத்திற்கு சாத்தியமான மனிதாபிமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அனோஜனின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் துயரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது மகனை மீட்டுத் தாருங்கள்: மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீருடன் கோரிக்கை