தீவிரமடைந்துள்ள ஈரான் போர்: உலகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ட்ரம்ப்
ஈரானுடனான போர் ஏழாவது மாதமாக நீடித்து வரும் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உலகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்த போதிலும், அப்பிராந்தியத்தில் தொடரும் பதற்ற நிலைமை உலக நாடுகளிடையே பெரும் சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் விநியோகத்தை ஈரான் கட்டுப்படுத்தி வரும் அதேவேளை, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தங்கள் பிடியை இறுக்கியுள்ளனர்.
எரிபொருள் விலைகள்
இதன் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதுடன், செங்கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஹூதிகளுக்கு எதிராக நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்குவது, வளைகுடா பிராந்திய நட்பு நாடுகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் காரணமாக ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு சரிவடைந்து வரும் நிலையில், வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தை
ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளின் ஆதரவின்றி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போர், தற்போது இருதரப்புக்கும் இடையே இழுபறி நிலையாக மாறியுள்ளது.

எதிர்வரும் வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் போது, வளைகுடா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
எனினும், போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.