நாமலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முக்கிய ஆதாரம்.. திட்டவட்டமாக மறுக்கும் மொட்டுதரப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவிற்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே எந்தவித மின்னஞ்சல் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு மின்னஞ்சலிலும் நமல் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த மின்னஞ்சல்கள் நிறுவனத்தின் சில உள்நிலை அதிகாரிகளுக்கு இடையே மட்டுமே பரிமாறப்பட்டவை என்றும், அவற்றில் நமல் ராஜபக்சவின் ஈடுபாடு அல்லது அவர் இலஞ்சம் பெற்றது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..
ஷசீந்திர ராஜபக்சவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் பணம் வைப்பீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஒரே முக்கிய ஆதாரம், நிமல் பெரேரா என்ற நபர் அரசாங்கத்திற்கு அளித்த வாக்குமூலம் மட்டுமே என்று சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மேலும், சாட்சியச் சட்டத்தின் (Evidence Ordinance) கீழ், ஒரு குற்றத்தில் உடந்தையாக இருந்தவரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரைத் தண்டிக்க முடியாது என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், அரசியல் ரீதியாக ஒடுக்கும் நோக்கத்துடன், பொதுச் சொத்துச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி நாமல் ராஜபக்சவைச் சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.